கரடி தாக்கி முதியவர் படுகாயம்


கரடி தாக்கி முதியவர் படுகாயம்
x
தினத்தந்தி 17 Sept 2023 1:45 AM IST (Updated: 17 Sept 2023 1:46 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரி அருகே கரடி தாக்கியதில் முதியவர் படுகாயம் அடைந்தார்.

நீலகிரி

கோத்தகிரி

கோத்தகிரி அருகே கரடி தாக்கியதில் முதியவர் படுகாயம் அடைந்தார்.

கரடி தாக்கியது

கோத்தகிரி அருகே மார்வளா எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் தைநீஷ் (வயது 60). இவர் அதே பகுதியில் உள்ள பங்களாவில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு அவர் வழக்கம்போல் பணிக்கு சென்றார். பின்னர் தைநீஷ் நேற்று காலை 6 மணிக்கு பணியை முடித்து விட்டு, தனது குடியிருப்புக்கு தேயிலை தோட்டம் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது புதர் மறைவில் குட்டியுடன் நின்றிருந்த கரடி திடீரென வெளியே வந்து தைநீஷை முகம் மற்றும் தலையில் தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த அவர் வலி தாங்க முடியாமல் அலறினார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து கரடியை விரட்டி விட்டு, தைநீஷை உடனடியாக மீட்டு கோத்தகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

நிவாரண தொகை

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து தகவல் அளித்த கட்டப்பெட்டு வனச்சரகர் செல்வகுமார், வனவர் வினோத் ஆகியோர் அரசு மருத்துவமனைக்கு சென்று தைநீஷுக்கு ஆறுதல் கூறினர். மேலும் வனவிலங்கு தாக்குதலால் காயமடைந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வழங்கும் நிவாரணத் தொகை வழங்க பரிந்துரைக்கப்படும் என்று தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் தொழிலாளர்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.


Related Tags :
Next Story