பழைய போலீஸ் நிலையம், உடற்பயிற்சி கூடமாக மாற்றம்
பழைய போலீஸ் நிலையம், உடற்பயிற்சி கூடமாக மாற்றம்
வால்பாறை
வால்பாறை பகுதியில் வால்பாறை, காடம்பாறை, முடீஸ், சேக்கல்முடி ஆகிய 4 இடங்களில் போலீஸ் நிலையங்கள் உள்ளது. இதில் வால்பாறையில் உள்ள பழைய போலீஸ் நிலையம் 95 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது. 2010-ம் ஆண்டு வரை செயல்பட்ட இந்த போலீஸ் நிலையம், அதன்பிறகு இடப்பற்றாக்குறை காரணமாக மூடப்பட்டது. அதற்கு பதிலாக அதனருகில் புதிய போலீஸ் நிலையம் கட்டப்பட்டது. இங்குதான் தற்போது போலீஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த 13 ஆண்டுகளாக பயன்படுத்தப்படாத நிலையில் இருந்து வந்த பழைய போலீஸ் நிலைய கட்டிடத்தில் தங்கும் விடுதி அமைப்பது, பொது நூலகம் அமைப்பது, தகவல் தொழில்நுட்ப மையம் அமைப்பது போன்ற கோரிக்கைகள் எழுந்து வந்தது.
இதையடுத்து பழைய போலீஸ் நிலைய கட்டிடம், போலீசாரின் உடற்பயிற்சி கூடமாக மாற்றப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை துணை போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார் மேற்கொண்டார். இதற்கு போலீசார் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.