மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி பலி
வேகத்தடையில் ஏறி இறங்கியபோது மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.
செய்யாறு
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தாலுகா தாஜ்புரா பகுதி, ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் முனுசாமி. இவரது மனைவி வள்ளியம்மாள் (வயது 65).
இவர் மற்றும் மகன்கள் கடந்த 1-ந் தேதி திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா பெருங்கட்டூர் கிராமத்தில் நடைபெற்ற உறவினரின் வளைகாப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
பின்னர் 2 மோட்டார் சைக்கிள்களில் மீண்டும் வீட்டிற்கு திரும்பிக் கொண்டு இருந்தனர்.
வெம்பாக்கம் - ராந்தம் சாலையில் பூதேரி கிராமம் வழியாக சென்றபோது, அங்குள்ள வேகத்தடையில் மகன் பாஸ்கர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் ஏறி இறங்கிய போது பின்னால் உட்கார்ந்து வந்த வள்ளியம்மாள் தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.
உடனடியாக அவரை மகன்கள் மீட்டு பெருங்கட்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து மோரணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபாரதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.