ஒலிம்பியாட் செஸ் போட்டி விழிப்புணர்வு மினி மாரத்தான்


ஒலிம்பியாட் செஸ் போட்டி விழிப்புணர்வு மினி மாரத்தான்
x

பாளையங்கோட்டையில் நடந்த ஒலிம்பியாட் செஸ் போட்டி விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டியை அப்துல்வகாப் எம்.எல்.ஏ. கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

திருநெல்வேலி

சென்னை மாமல்லபுரத்தில் 44-வது ஒலிம்பியாட் செஸ் போட்டி வருகிற 28-ந் தேதி முதல் அடுத்த மாதம் 10-ம் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டி குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நெல்லை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. நேற்று பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்தில் மினி மாரத்தான் போட்டி நடந்தது. நெல்லை மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன் தலைமை தாங்கினார். துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மாநகர துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்துல் வகாப் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மாரத்தான் போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த ஓட்டத்தில் 120-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த மினி மாரத்தான் போட்டி பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்தில் இருந்து தொடங்கி அரசு மருத்துவமனை வரை சென்று மீண்டும் அண்ணா விளையாட்டு மைதானத்தை வந்தடைந்தது. மாணவர்கள் கையில் ஒலிம்பியாட் செஸ் விளம்பர பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொண்டே சென்றனர். இதில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மண்டல முதுநிலை மேலாளர் வீரபத்திரன், மாவட்ட விளையாட்டு அலுவலர் கிருஷ்ண சக்கரவர்த்தி, சதுரங்க கழக பொறுப்பாளர்கள் பால்குமார், செல்வமணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story