ஆம்னி பஸ் உரிமையாளர், காப்பீட்டு நிறுவனத்துக்கு அபராதம்


ஆம்னி பஸ் உரிமையாளர், காப்பீட்டு நிறுவனத்துக்கு அபராதம்
x
தினத்தந்தி 24 Jun 2023 12:30 AM IST (Updated: 24 Jun 2023 5:27 PM IST)
t-max-icont-min-icon

தீ விபத்தில் உடைமைகளை இழந்தவருக்கு இழப்பீடு வழங்க ஆம்னி பஸ் உரிமையாளர் மற்றும் காப்பீட்டு நிறுவனத்துக்கு அபராதம் விதித்து தேனி நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டது.

தேனி

ஆம்னி பஸ்சில் தீ

தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகே கெங்குவார்பட்டியை சேர்ந்தவர் ஸ்டீபன் (வயது 37). இவர் தி.மு.க. மாணவரணி நிர்வாகியாக உள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் 7-ந்தேதி இவர் சென்னையில் இருந்து தேனிக்கு வந்த ஐவர் டிராவல்ஸ் நிறுவனத்தின் ஆம்னி பஸ்சில் டிக்கெட் முன்பதிவு செய்து பயணம் செய்தார். அதற்காக அவர் ரூ.1,575-க்கு டிக்கெட் பெற்றார். அவருடன் அவருடைய உறவினர் ரவி என்பவரும் பயணம் செய்தார்.

அந்த பஸ் சென்னையை அடுத்த காட்டாங்குளம் பகுதியில் வந்தபோது திடீரென தீப்பற்றியது. பஸ்சில் பயணம் செய்த ஸ்டீபன் உள்பட 27 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த தீ விபத்தில் ஸ்டீபன் எடுத்து வந்த பை எரிந்து நாசம் அடைந்தது. அதற்குள் இருந்த பொருட்களும் எரிந்து நாசம் ஆகின. அந்த வகையில், ரூ.56 ஆயிரத்து 900 மதிப்பிலான அவருடைய 12 வகையான உடைமைகள் நாசம் ஆகின.

அபராதம்

இதையடுத்து தனக்கான இழப்பீடு கேட்டு ஐவர் டிராவல்ஸ் நிறுவன உரிமையாளரான சண்முகத்துக்கும், காப்பீட்டு நிறுவனத்துக்கும் வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். அதற்கு முறையான பதில் கிடைக்காததால் இதுகுறித்து தேனி மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வக்கீல் செல்வக்குமார் மூலமாக ஸ்டீபன் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கின் மீது நீதிபதி சுந்தரம், உறுப்பினர்கள் அசினா, ரவி ஆகியோர் கொண்ட அமர்வு விசாரணை நடத்தினர். இறுதி விசாரணை முடிந்ததை தொடர்ந்து தீர்ப்பளிக்கப்பட்டது. அதில், பாதிக்கப்பட்ட ஸ்டீபனுக்கு பஸ் உரிமையாளர், காப்பீட்டு நிறுவனம் இணைந்து, அவர் இழந்த உடைமைகளுக்கான ரூ.56 ஆயிரத்து 900-ஐ ஒரு மாதத்துக்குள் வழங்க வேண்டும். மனுதாரரின் மன உளைச்சலுக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு, சேவை குறைபாடுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம், வழக்கு செலவுக்கு ரூ.10 ஆயிரத்தை வழங்க வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது.


Next Story