சேலம் குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா 200 ஏக்கரில் விரிவாக்கம் செய்யப்படும்


சேலம் குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா 200 ஏக்கரில் விரிவாக்கம் செய்யப்படும்
x

சேலம் குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா 200 ஏக்கரில் விரிவாக்கம் செய்யப்படும் என்று சட்டமன்ற மதிப்பீட்டு குழு தலைவர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்தார்.

சேலம்

சேலம்:

2-வது நாளாக ஆய்வு

தமிழ்நாடு சட்டமன்ற மதிப்பீட்டு குழுவினர் கடந்த 2 நாட்களாக சேலத்தில் முகாமிட்டு ஆய்வு பணியில் ஈடுபட்டனர். இந்த குழுவின் தலைவரான டி.ஆர்.பி. ராஜா தலைமையில் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, அருள், அன்பழகன், ஈ.ஆர்.ஈஸ்வரன், எழிலரசன், பாலசுப்பிரமணியன், முகமது ஷாநவாஸ், செல்லூர் கே.ராஜூ, ராஜகுமார் ஆகியோர் 2-வது நாளான நேற்று ஏற்காடு அடிவாரம் பகுதியில் உள்ள குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் ஆய்வு நடத்தினர்.

அப்போது அவர்கள் பூங்காவில் உள்ள வனவிலங்குகள் குறித்தும், சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். இதையடுத்து சட்டமன்ற மதிப்பீட்டு குழுவினர் ஏற்காடு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கருங்காளி பழங்குடியினர் கிராமத்தில் வசிக்கும் வன குடியிருப்பாளர்களை சந்தித்து அவர்களின் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தனர்.

ஆய்வு கூட்டம்

பின்னர் அவர்கள் ரூ.92 கோடியே 13 லட்சம் மதிப்பீட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பழைய பஸ் நிலையம் மறுசீரமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அதைத்தொடர்ந்து சட்டமன்ற மதிப்பீட்டு குழு தலைவர் டி.ஆர்.பி.ராஜா தலைமையில் அரசு அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இதில் கருங்காளி பழங்குடியினர் கிராமத்தில் ஆய்வு பணியின் போது பழங்குடியினர் சாதிச்சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்த 7 பேருக்கு சாதி சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் ஊராட்சி வளர்ச்சி துறையின் சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 7 பயனாளிகளுக்கு விவசாய பயன்பாட்டிற்காக தனிநபர் கிணறு அமைப்பதற்கான உத்தரவு ஆணைகளும், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் 9 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.57 லட்சத்து 20 ஆயிரம் கடனுதவிகளும் வழங்கப்பட்டன.

குரும்பப்பட்டி பூங்கா

இதையடுத்து சட்டமன்ற மதிப்பீட்டு குழு தலைவர் டி.ஆர்.பி. ராஜா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சேலம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பணிகளின் தற்போதைய நிலை குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்ட போது பாலப்பணிகளை விரைவுபடுத்திட வேண்டும் எனவும், பழைய பஸ் நிலையம் மறுசீரமைக்கும் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளோம். குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா 31 ஏக்கரில் உள்ளது. இருந்தாலும் அது முழுமையான பூங்காவாக இல்லை. இந்த பூங்காவை மேம்படுத்த ரூ.8 கோடி நிதி கூடுதலாக கேட்கப்பட்டுள்ளது. அதற்கும் நிச்சயமாக பரிந்துரை செய்வதுடன், மேலும் நிதி தேவைப்பட்டாலும் செய்து முழுமையான சேட்லைட் பூங்காவாக சென்னை வண்டலூர் பூங்கா போன்று மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

விரிவாக்கம்

இயற்கை சூழலில் அமைந்தள்ள இந்த பூங்காவிற்கு இன்னும் அதிகமான வனவிலங்குகளை கொண்டு வரவேண்டும். குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா வெகு விரைவில் 200 ஏக்கர் பரப்பளவில் விரிவாக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை அரசு செய்து வருகிறது. சேலம் அண்ணா பூங்காவில் ஒரு வாரத்திற்குள் மீண்டும் அண்ணா சிலை நிறுவ வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கார்மேகம், மாநகராட்சி மேயர் ரவிச்சந்திரன், எம்.எல்.ஏ.க்கள் வக்கீல் ராஜேந்திரன், சதாசிவம், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை செயலாளர் சீனிவாசன், துணை செயலாளர் சிவகுமரன், மாவட்ட வருவாய் அலுவலர் ஆலின் சுனேஜா, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பாலச்சந்தர், உதவி கலெக்டர் வீர் பிரதாப் சிங், மாவட்ட வன அலுவலர் கவுதம் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story