பொள்ளாச்சி-பாலக்காடு சாலையில் ஆபத்தான மின்கம்பத்தால் வாகன ஓட்டிகள் அச்சம்-உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை


பொள்ளாச்சி-பாலக்காடு சாலையில்  ஆபத்தான மின்கம்பத்தால் வாகன ஓட்டிகள் அச்சம்-உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை
x
தினத்தந்தி 3 Jan 2023 12:15 AM IST (Updated: 3 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி-பாலக்காடு சாலையில் ஆபத்தான மின்கம்பத்தால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்து உள்ளார்கள். அதனால் உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி-பாலக்காடு சாலையில் ஆபத்தான மின்கம்பத்தால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்து உள்ளார்கள். அதனால் உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.

மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சப்- கலெக்டரின் நேர்முக உதவியாளர் வெங்கடாச்சலம் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் குறித்த மனுக்களை பெற்றார். இந்த கூட்டத்தில் தென்னை உற்பத்தியாளர் சங்கம் மற்றும் விவசாயிகள் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-

பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான தேவம்பாடி வலசு, ராமநாதபுரம், சேர்வைக்காரன்பாளையம், கோவிந்தனூர், புரவிபாளையம் மண்ணூர், கானல்புதூர், ஆர்.பொன்னாபுரம், ஜமீன்காளியாபுரம், பெரும்பதி, டி.காளியாபுரம், காந்திஆஸ்ரமம் உள்ளிட்ட பல கிராமப் பகுதிகளில் பெரியம்மை நோய் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்த நோயால் இதுவரை 24 மாடுகள் இறந்துள்ளன. மேலும் 445-க்கும் மேற்பட்ட மாடுகள் பெரிய அம்மை நோய் தாக்கத்தால் அவதிப்பட்டு வருகின்றன. ஆனால் கால்நடை துறையினர் சார்பில் நோய் பாதிப்பு இல்லை என்று கூறி வருகின்றனர். அதனால் பெரியம்மை நோயால் பாதிக்கப்பட்டு வரும் கால்நடைகளை கால்நடைத்துறையினர் பார்வையிட்டு இறப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இறந்து போன கால்நடைகளுக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் கிராம பகுதிகளில் நோயை கட்டுப்படுத்த சிறப்பு மருத்துவ முகாம் நடத்த வேண்டும்.

ஆபத்தான மின்கம்பம்

மேலும் பொள்ளாச்சி நகராட்சியில் 33-வது வார்டு அ.தி.மு.க சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், சுமார் 20 வருடங்களாக நடராஜ் மணியக்காரர் காலனி மற்றும் பெரியார் காலனி கிழக்கு, மேற்கு பொதுமக்களின் பயன்பாட்டில் உள்ளது. தற்போது 2 மாத காலமாக நகராட்சி பொதுக் கழிப்பிடத்தில் ஒயர்கள் சேதமடைந்துள்ளதால் மின்விளக்குகள் ஔிராமல் காணப்பட்டு வருகிறது. அதனால் பொதுமக்கள் சிரமம் அடைகின்றனர். இதனை சரிசெய்ய வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

மேலும் பொள்ளாச்சி நகர பா.ஜனதா கட்சி சார்பில் கொடுக்கப்பட்டுள்ள மனுவில், பொள்ளாச்சியில் -பாலக்காடு சாலை அருகில் ராமச்சந்திரன் பட்டறை பின்புறத்தில் உள்ள ஒரு மின் கம்பம் மிகவும் சேதமடைந்துள்ளது. எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் உள்ளது. இதனால் அந்த மின்கம்பம் அருகில் செல்வதற்கு பொதுமக்கள் வாகன ஓட்டிகளும் அச்சமடைகின்றனர். மின்கம்பம் விழுந்தால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே தமிழக மின்சார வாரியம் இந்த மின்கம்பத்தை மாற்றி புதிய மின்கம்பம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் பொள்ளாச்சி நகரில் பொது மற்றும் தனியார் இடங்களில் குப்பைகளை சரியாக அப்புறப்படுத்தாமல் சில இடங்களில் குப்பைகளுக்கு தீ வைப்பதால் மக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதை தடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.



Next Story