ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரிலேயே அ.தி.மு.க. அலுவலகத்தில் தாக்குதல்; ஜெயலலிதா அறை முழுவதும் சூறை - சி.வி.சண்முகம்
ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரிலேயே அ.தி.மு.க. அலுவலகத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது என்றும் ஜெயலலிதா அறை முழுவதும் சூறையாடப்பட்டது என்றும் சி.வி.சண்முகம் கூறி உள்ளார்.
சென்னை
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:-
அதிமுக அலுவலகம் தொண்டர்கள் தாக்கப்பட்டது தொடர்பாக எனது புகார் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. தாக்குதல் நடந்து 50 நாட்களுக்கு மேல் ஆகியும் ஓ.பன்னீர் செல்வம் , அவரது ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரிலேயே அதிமுக அலுவலகத்தில் தாக்குதல் நடந்துள்ளது. ஜெயலலிதா இருந்த அறை முழுவதுமாக சூறையாடப்பட்டது. திமுக தான் நடந்த சம்பவத்திற்கு முழு காரணம். அதற்கு துணையாக இருந்தது காவல்துறை.
அ.தி.மு.க. அலுவலகம் தாக்கப்பட்டது தொடர்பாக ராயப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அன்றே புகார் அளித்த நிலையில் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சிபிசிஐடி போலீசார் இன்னும் ஏன் அதிமுக அலுவலகம் சென்று விசாரணை நடத்தவில்லை?. 2 நாட்கள் பொறுத்திருந்து பார்ப்போம். விசாரணை நடைபெறவில்லை என்றால் மீண்டும் நீதிமன்றத்தை நாடுவோம்.
15 மாத கால ஆட்சியில் கொலை, கொள்ளை என சட்டம் ஒழுங்கு சீரழிந்து இருக்கிறது. தமிழக காவல்துறை திமுகவின் தொண்டர் படையாக மாறிவிட்டது" என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.