கார் மீதுமினி லாரி மோதி 4 பேர் படுகாயம்
வீரபாண்டி அருகே கார் மீது மினிலாரி மோதியதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
கோவை டவுன்காலை சேர்ந்தவர் ரிஷிகிருஷ்ணா (வயது 26). இவர், பொள்ளாச்சியை சேர்ந்த ராஜசேகர் (63), அவரது மனைவி பத்மாவதி (45) ஆகியோருடன் தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டியில் உள்ள உறவினர் வீட்டிற்கு காரில் வந்தார். பின்னர் நேற்று முன்தினம் இரவு இவர்கள் 3 பேரும், உறவினர்களான பாலஹர்ஷிகா (11) மற்றும் காஞ்சனா (50) ஆகியோருடன் வீரபாண்டியில் உள்ள கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக சென்றனர். காரை ரிஷிகிருஷ்ணா ஓட்டினார்.
திண்டுக்கல்-குமுளி நெடுஞ்சாலையில் முத்துதேவன் பட்டி ஜங்ஷன் அருகே சென்றபோது, அந்த வழியாக வந்த மினிலாரி கார் மீது மோதியது. இந்த விபத்தில் காரில் வந்த ராஜசேகர், பத்மாவதி, பாலஹர்ஷிகா, காஞ்சனா ஆகிய 4 பேரும் படுகாயம் அடைந்தனர். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து லாரியை ஓட்டி வந்த தேவாரம் வடக்கு தெருவை சேர்ந்த பார்த்திபன் (24) மீது வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.