ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழுப்புரம் நேருஜி சாலையில் உள்ள வீரவாழியம்மன் கோவிலில் ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி நேற்று காலை 6 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் 8 மணிக்கு கரகம் வீதிவலம் வருதல் நடந்து பகல் 12 மணியளவில் சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது.
இதில் பக்தர்கள் கொண்டு வந்திருந்த கூழ், ஒரு கொப்பறையில் ஊற்றி வார்க்கப்பட்டு அம்மனுக்கு படையலிட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதமாக கூழ் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் சூரியநாராயணன், ஆய்வாளர் செல்வராஜ், பரம்பரை அறங்காவலர் வேலவன் ஆகியோர் செய்திருந்தனர்.
மாம்பழப்பட்டு முத்தாலம்மன்
விழுப்புரம் அருகே மாம்பழப்பட்டு கிராமத்தில் உள்ள முத்தாலம்மன் கோவிலில் ஆடி முதல் வெள்ளிக்கிழமையை யொட்டி பக்தர்கள் முதுகில் அலகு குத்தி வாகனங்களில் கட்டி தேர் இழுத்தும், தூக்குத்தேர் தூக்கியும் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் கோவிலில் மாவிளக்கு எடுத்து பொங்கல் வைத்தும் வழிபாடு நடத்தினர். பின்னர் முத்தாலம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் விழுப்புரம் செல்லியம்மன், அங்காளம்மன், காணை துர்க்கை அம்மன், பூவரசன்குப்பம் செங்கழுனி மாரியம்மன் உள்ளிட்ட பல்வேறு அம்மன் கோவில்களில் ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.
மேல்மலையனூர்
மேல்மலையனூரில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு கருவறையில் உள்ள அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலித்தனர். உற்சவ அம்மனுக்கு ஆதிபராசக்தி அலங்காரம் செய்யப்பட்டு உட்பிரகாரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி கும்பிட்டனர். இதற்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழுத் தலைவர் சந்தானம் பூசாரி, அறங்காவலர்கள் செந்தில்குமார் பூசாரி, தேவராஜ் பூசாரி, ராமலிங்கம் பூசாரி, செல்வம் பூசாரி, சரவணன் பூசாரி, வடிவேல் பூசாரி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.