தேசிய நெடுஞ்சாலையில் தீப்பற்றி எரிந்த கார்


தேசிய நெடுஞ்சாலையில் தீப்பற்றி எரிந்த கார்
x

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்ற கார் திடீரென தீப்பற்றி எரிந்து நாசமானது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வேலூர்

தீப்பற்றி எரிந்த கார்

வேலூர் ரங்காபுரம் பகுதியை சேர்ந்தவர் மாதையன் (வயது 32). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒருவரிடம் இருந்து 2010-ம் ஆண்டு மாடல் கார் ஒன்றை 2-வதாக வாங்கி உள்ளார். காரின் முன்பக்க விளக்கு சரியாக எரியவில்லை என்று கூறப்படுகிறது. அதனால் மாதையன் பழுதான மின்விளக்கை சரி செய்வதற்காக நேற்று காலை வேலூரில் உள்ள மெக்கானிக் கடைக்கு காரை ஓட்டி சென்றார்.

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தின் மீது சென்று கொண்டிருந்தபோது காரின் முன்பகுதியில் இருந்து திடீரென புகை வந்தது.

இதையடுத்து அவர் உடனடியாக காரை சாலையோரம் நிறுத்தி விட்டு இறங்கி முன்பக்கத்தை திறந்து பார்த்தார். பேட்டரியில் இருந்து புகை வந்ததால் அதில் இருந்த ஒயரை அகற்றி உள்ளார். அப்போது திடீரென கார் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. அதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக அங்கிருந்து சிறிதுதூரம் சென்று விட்டார். முன்பக்கம் பற்றி எரிந்த தீ கண்ணிமைக்கும் நேரத்தில் கார் முழுவதும் பரவி பற்றி எரிந்தது.

போக்குவரத்து பாதிப்பு

இதனைக்கண்ட வாகன ஓட்டிகள் சிறிதுதூரத்துக்கு முன்பாக வாகனங்களை நிறுத்தி விட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தகவலறிந்த வேலூர் மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர் பழனி தலைமையில் நிலைய அலுவலர் செல்வமூர்த்தி மற்றும் வீரர்கள் அங்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 30 நிமிட போராட்டத்துக்கு பின்னர் முற்றிலும் தீ அணைக்கப்பட்டது.

இதற்கிடையே நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் வேலூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று போக்குவரத்து நெரிசலை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். கார் எரியும் பகுதியின் அருகே தடுப்புகள் வைத்து வாகனங்கள் வரிசையாக செல்ல அனுமதித்தனர். இந்த விபத்தில் கார் முற்றிலும் எரிந்து நாசமானது. இதனால் அந்த பகுதியில் சுமார் 45 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஓடும் கார் தீப்பற்றி எரிந்ததால் தேசிய நெடுஞ்சாலையில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

1 More update

Next Story