தேசிய நெடுஞ்சாலையில்மண் லாரி கவிழ்ந்தது
மகுடஞ்சாவடி அருகே நடுரோட்டில் மண் லாரி கவிழ்ந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இளம்பிள்ளை
மண் லாரி
ஈரோடு மாவட்டம் சக்தி ஆப்பக்கூடல் பகுதியில் இருந்து சேலம் மாவட்டம் ஓமலூருக்கு மண் லோடு ஏற்றி கொண்டு டிப்பர் லாரி ஒன்று வந்தது. லாரியை ஓமலூர் பகுதியை சேர்ந்த பிரபு என்பவர் ஓட்டி வந்தார். மகுடஞ்சாவடி அருகே காளிகவுண்டம்பாளையம் பகுதியில் லாரி வந்த போது திடீரென டிப்பர் லாரியின் டயர் வெடித்தது.
இதில் தாறுமாறாக சாலையில் ஓடிய லாரி நடுரோட்டில் நின்றது. அப்போது சங்ககிரியில் இருந்து வந்த சரக்கு லாரி, மண் லாரியின் பின்பக்கத்தில் மோதியது. இதில் மண் லோடு ஏற்றி இருந்த லாரி நடுரோட்டில் கவிழ்ந்தது.
போக்குவரத்து பாதிப்பு
இதனால் சாலையில் மண் கொட்டி குவிந்து கிடந்தது. அந்த வழியாக வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தேசிய நெடுஞ்சாலையில் சங்ககிரி பகுதியில் இருந்து சேலம் நோக்கி வந்த வாகனங்கள் செல்ல முடியாமல் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நின்றன. இதனால் 2 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்த மகுடஞ்சாவடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். சாலையில் கவிழ்ந்து கிடந்த மண்ணை அகற்றி லாரியை அப்புறப்படுத்தினர். அதன்பிறகு போக்குவரத்து சரியானது. இதனால் அந்த பகுதியே பரபரப்பாக காணப்பட்டது.