ஆயுதபூஜையையொட்டி கரூர் மார்க்கெட்டில் பூஜை பொருட்கள் வாங்க கூட்டம் அலைமோதல்


ஆயுதபூஜையையொட்டி கரூர் மார்க்கெட்டில் பூஜை பொருட்கள் வாங்க கூட்டம் அலைமோதல்
x

ஆயுதபூஜையையொட்டி கரூர் காமராஜ் மார்க்கெட்டில் பூஜை பொருட்கள் வாங்க கூட்டம் அலைமோதியது. பூக்கள், பழங்களின் விலை கிடுகிடுவென உயர்வடைந்துள்ளது.

கரூர்

ஆயுத பூஜை

ஆயுத பூஜை இன்று(செவ்வாய்கிழமை), விஜயதசமி நாளை(புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. ஆயுத பூஜை தினத்தன்று உழைப்புக்காக, வருமானத்துக்காக பயன்படுத்தும் எந்த பொருளாக இருந்தாலும் அதற்கு மஞ்சள், குங்குமம், பூ வைத்து மரியாதை செய்ய வேண்டும். மேலும், கல்வி ஞானத்தை தரக்கூடிய படிக்கும் புத்தகங்களுக்கும் மஞ்சள், குங்குமம்விட்டு பூஜை அறையில் வைத்து வணங்கி மரியாதை செலுத்த வேண்டும்.

இந்தாண்டு ஆயுதபூஜையையொட்டி கரூர் காமராஜ் மார்க்கெட்டில் பூஜை பொருட்கள் மற்றும் காய்கறி, பழங்கள் வாங்க பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று தாக்கத்தால் பண்டிகைகளை விமரிசையாக கொண்டாடாத நிலையில் இந்தாண்டு ஆயுதபூஜை விழா களை கட்டியுள்ளது.

பொதுமக்கள் குவிந்தனர்

பொரி, அவல், கடலை மற்றும் பழங்கள், வாழைகள் வாங்க பொதுமக்களும் நேற்று காலை முதலே குவிந்து இருந்தனர். மக்கள் அதிகஅளவில் திரண்டதால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்களை அலங்கரிக்க தேவையான தோரணங்கள், அலங்கார பொருட்களும் அதிகஅளவில் விற்பனையானது.

பூக்கள் விலை உயர்வு

கரூர் ரெயில் நிலையம் அருகே உள்ள குழந்தைவேல் சாலையில் உள்ள பூ மார்க்கெட் மல்லிகைப்பூ கிலோ ரூ.3 ஆயிரத்திற்கும், முல்லை ரூ.2 ஆயிரத்திற்கும், ஜாதிமல்லி ரூ.1,500-க்கும், சம்பங்கி ரூ.600-க்கும், கனகாம்பரம் ரூ.400-க்கும், கோழி கொண்டை ரூ.100-க்கும், விருச்சி ரூ.200-க்கும் விற்பனையானது. விலை உயர்ந்து காணப்பட்டாலும் வியாபாரிகள், பொதுமக்கள் போட்டிக் போட்டுக் கொண்டு தங்களுக்கு தேவையான பூக்களை வாங்கி சென்றனர்.

இதேபோல் நொய்யல் பகுதியில் நேற்று நடைபெற்ற ஏல‌த்தில் குண்டு மல்லி கிலோ ரூ.1500-க்கும், சம்பங்கி ரூ.400- க்கும், அரளி ரூ.450- க்கும், ரோஜா ரூ.440- முல்லைப் பூ ரூ.1500-க்கும், செவ்வந்திப்பூ ரூ.400- க்கும், கனகாம்பரம் ரூ.1350-க்கும், ஜாதி மல்லி 900 விற்பனையானது.

காய்கறி விலை

கரூர் காமராஜ் மார்க்கெட்டில் நேற்று விற்கப்பட்ட காய்கறிகளின் விலை நிலவரம், கத்தரிக்காய் கிலோ ரூ 30-க்கும், வெண்டைக்காய் ரூ.30-க்கும், பீர்க்கங்காய் ரூ.30-க்கும், பச்சை மிளகாய் ரூ.40-க்கும், தக்காளி ரூ.40-க்கும், பெரிய வெங்காயம் ரூ.30-க்கும், சின்ன வெங்காயம் ரூ.40-க்கும், உருளைக்கிழங்கு ரூ.40-க்கும், கேரட் ரூ.90-க்கும், பீன்ஸ் ரூ.70-க்கும், முட்டைக்கோஸ் ரூ.50-க்கும் விற்பனையாகின.

விலையில் மாற்றம் இல்லை

கரூர் காமராஜ் மார்க்கெட் காய்கறி வியாபாரி அசோக் கூறுகையில், கடந்த ஆண்டு ஆயுத பூஜை அன்று விற்பனையான விலையுடன் ஒப்பிடும் போது இந்தாண்டு காய்கறிகளின் விலை பெரிய அளவில் மாற்றம் ஏதுமில்லை. அதனால் பொதுமக்கள் காய்கறிகளை விலை ஏற்றம் இல்லாமல் மகிழ்ச்சியுடன் வாங்கி சென்றனர். என்றார்.

விலை உயர்வு

பூஜை பொருட்கள் வாங்க வந்த கரூர் அண்ணா வளைவு பகுதியை சேர்ந்த இளங்கோ கூறுகையில், தற்போது காய்கறிகள் மற்றும் பழங்களின் விலை சற்று உயர்ந்துள்ளது. மேலும் காமராஜ் மார்க்கெட் பகுதியில் பல கடைகள் இல்லாததால் பொதுமக்கள் வரவும் சற்று குறைவாக உள்ளது. என்றார்.

கரூர் ஓந்தாம்பட்டியை சேர்ந்த ராஜா கூறுகையில், ஆயுத பூஜைக்கு தேவையான பொருட்களின் விலை கடந்த ஆண்டைவிட சற்று அதிகமாக இருக்கிறது. மேலும் பழங்கள் மற்றும் பூக்களின் விலை சராசரி நாட்களை காட்டிலும் கூடுதலாக உள்ளது. இருப்பினும் பூஜைக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்கிறோம். என்றார்.


Next Story