ஆயுத பூஜையையொட்டி உழவர் சந்தைகளில் காய்கறி விற்பனை மும்முரம்


ஆயுத பூஜையையொட்டி உழவர் சந்தைகளில் காய்கறி விற்பனை மும்முரம்
x
தினத்தந்தி 23 Oct 2023 1:37 AM IST (Updated: 23 Oct 2023 1:39 AM IST)
t-max-icont-min-icon

ஆயுத பூஜையையொட்டி உழவர் சந்தைகளில் காய்கறி விற்பனை மும்முரமாக நடந்தது

ஈரோடு

ஆயுத பூஜையையொட்டி உழவர் சந்தைகளில் காய்கறி விற்பனை மும்முரமாக நடந்தது. கடைகளில் பழங்களை பொதுமக்கள் ஆர்வமாக வாங்கிச் சென்றனர்.

உழவர் சந்தை

சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையையொட்டி ஈரோட்டில் நேற்று காய்கறி, பழங்களின் விற்பனை மும்முரமாக நடந்தது. உழவர் சந்தைகள், ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட், தனியார் பழமுதிர் சோலைகள் போன்ற இடங்களில் காய்கறி, பழங்களின் விற்பனை விறுவிறுப்பாக காணப்பட்டது.

ஈரோடு சம்பத் நகர், பெரியார் நகர் ஆகிய உழவர் சந்தைகளில் அதிகாலையில் இருந்தே விவசாயிகள் காய்கறியை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இதேபோல் பொதுமக்களும் ஆர்வமாக வந்து காய்கறியை வாங்கி சென்றனர். ஈரோடு சம்பத் நகர் உழவர் சந்தையில் 27 ஆயிரத்து 687 கிலோ காய்கறியும், 8 ஆயிரத்து 604 கிலோ பழங்களும் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு இருந்தன. இதில் மொத்தம் ரூ.10 லட்சத்து 53 ஆயிரத்து 614 மதிப்பிலான காய்கறியும், பழங்களும் விற்பனையானது.

பழங்கள்

இதேபோல் ஈரோடு பெரியார் நகர், பெருந்துறை, சத்தியமங்கலம், கோபிசெட்டிபாளையம், தாளவாடி உள்பட மாவட்டத்தில் உள்ள 6 உழவர் சந்தைகளிலும் மொத்தம் 58 ஆயிரத்து 952 கிலோ காய்கறியும், 15 ஆயிரத்து 668 கிலோ பழங்களும் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. இதில் மொத்தம் ரூ.22 லட்சத்து 66 ஆயிரத்து 496 மதிப்பிலான காய்கறி, பழங்கள் விற்பனையாகின.

சாலையோரமாக அமைக்கப்பட்டு இருந்த நடமாடும் பழக்கடைகளிலும் பொதுமக்கள் ஆர்வமாக பழங்களை வாங்கி சென்றனர். அனைத்து பழங்களின் விலையும் கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.50 வரை அதிகரித்து விற்பனையானது.

ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்டில் நேற்று விற்பனையான பழங்களின் விலை விவரம் கிலோவில் வருமாறு:-

ஆப்பிள் - ரூ.150 முதல் ரூ.200 வரை, மாதுளை - ரூ.220, சப்போட்டா - ரூ.60, சீதா பழம் - ரூ.70, கொய்யா - ரூ.100, நெல்லிக்காய் - ரூ.80, பன்னீர் திராட்சை - ரூ.100, ஆரஞ்சு - ரூ.150.


Next Story