சுதந்திர தினத்தையொட்டிமுக்கிய இடங்களில் வெடிகுண்டு தடுப்பு சோதனை:மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு


சுதந்திர தினத்தையொட்டிமுக்கிய இடங்களில் வெடிகுண்டு தடுப்பு சோதனை:மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு
x
தினத்தந்தி 14 Aug 2023 6:45 PM GMT (Updated: 14 Aug 2023 6:45 PM GMT)

தேனி மாவட்டத்தில் சுதந்திர தின விழாவையொட்டி முக்கிய இடங்களில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தேனி

சுதந்திர தின விழா

நாடு முழுவதும் சுதந்திர தின விழா இன்று (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதனால் நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. தேனி மாவட்டத்தில் சுதந்திர தினத்தையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே உத்தரவின்பேரில் அணைகள், வழிபாட்டு தலங்கள், பஸ் நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

போலீஸ் சோதனை சாவடிகளில் வாகன தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டது. ஆண்டிப்பட்டி அருகே கணவாய் சோதனை சாவடி, தேவதானப்பட்டி அருகே காட்ரோடு சோதனை சாவடி ஆகிய இடங்களிலும், தமிழக-கேரள மாநில எல்லையில் உள்ள சோதனை சாவடிகளிலும் போலீசார் நேற்று தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

வெடிகுண்டு சோதனை

மாவட்டம் முழுவதும் 1,000-க்கும் மேற்பட்ட போலீசார் சுதந்திர தின பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் வெடிகுண்டு கண்டறியும் சோதனைக்காக 2 குழுக்கள் அமைக்கப்பட்டன. சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வம், முத்துராஜ் தலைமையில் 4 பேர் கொண்ட குழுவினர் தேனி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம் உட்கோட்ட பகுதிகளில் அணைகள், பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்களில் சோதனை செய்தனர்.

இதேபோல், சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் 4 பேர் கொண்ட குழுவினர் போடி, உத்தமபாளையம் உட்கோட்ட பகுதிகளில் முக்கிய இடங்களில் வெடிகுண்டு கண்டறியும் சோதனையில் ஈடுபட்டனர். தேனியில் பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், ரெயில் நிலையம் மற்றும் ஆண்டிப்பட்டி வைகை அணை, பூங்கா ஆகிய இடங்களில் போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவிகள் மூலம் சோதனை நடத்தினர். ரெயிலிலும் பயணிகளின் உடைமைகளில் சோதனை நடத்தினர்.


Related Tags :
Next Story