கார்த்திகை திருநாளையொட்டி கோவில்களில் மகா தீபம் ஏற்றி வழிபாடு


கார்த்திகை திருநாளையொட்டி  கோவில்களில் மகா தீபம் ஏற்றி வழிபாடு
x
தினத்தந்தி 6 Dec 2022 6:45 PM GMT (Updated: 6 Dec 2022 6:46 PM GMT)

கார்த்திகை திருநாளையொட்டி கோவில்களில் மகா தீபம் ஏற்றி வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

தேனி

தீபத்திருநாள்

போடியில் பிரசித்தி பெற்ற பரமசிவன் மலைக்கோவில் அமைந்துள்ளது. தென் திருவண்ணாமலை என்றழைக்கப்படும் இக்கோவிலில் ஆண்டு தோறும் கார்த்திகை தீபத்திருநாளையொட்டி மகா தீபம் ஏற்றப்படும். அதன்படி இந்த ஆண்டு கார்த்திகை மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதற்காக 171 கிலோ எடையிலான பஞ்சு திரி தயாரிக்கப்பட்டது. இதில் பக்தர்களிடம் நன்கொடையாக பெறப்பட்ட 702 லிட்டர் நெய் ஊற்றப்பட்டது‌.

பின்னர் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, பரணி தீபம் கோவிலில் வலம் வந்து, பக்தர்களின் ஓம் நமச்சிவாயா சரண கோஷத்துடன் தீபம் ஏற்றப்பட்டது. இதையடுத்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது.

போடி நாகலாபுரம் அருகே மல்லிங்கர் கரட்டில் உள்ள மல்லிங்கேசுவரர் கோவிலிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. இதில் ஏராளமானவர்கள் பங்கேற்று மல்லிங்கேசுவரரை வழிபட்டனர்.

பக்தா்கள் தரிசனம்

போடி வினோபாஜி காலனியில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற்றது. இதில் சிவலிங்கப் பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, கோவில் வளாகத்தில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட சிவலிங்கப் பெருமானுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

பெரியகுளம் அருகே கைலாசப்பட்டியில் உள்ள பெரியநாயகி உடனுறை மலைமேல் கைலாசநாதர் கோவிலில் நேற்று காா்த்திகை தீபத்திருநாளையொட்டி மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. அன்பர் பணி செய்யும் பராமரிப்பு குழு தலைவர் ஜெயபிரதீப் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத்தை ஏற்றி வைப்பார்.

இந்நிலையில் நேற்று தீபம் ஏற்றுவது தொடர்பாக தி.மு.க., அ.தி.மு.க.வினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கோவில் செயல் அலுவலர் தீபம் ஏற்ற வேண்டும் என்று தி.மு.க.வினர் தெரிவித்தனர். இதையடுத்து ஜெயபிரதீப் கொடுத்த அகண்ட விளக்கால் மகா தீபத்தை கோவில் அர்ச்சகர் ஏற்றி வைத்தார். இதனைத் தொடர்ந்து அங்கிருந்து தி.மு.க. நிர்வாகிகள் கூச்சலிட்டபடி சென்றனர். விழாவில் தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளாமான பக்தா்கள் கலந்து கொண்டு தீபத்தை கைகூப்பி வணங்கினர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

முல்லைப்பெரியாற்றில் தீபம்

கார்த்திகை தீபத்திருநாளையொட்டி, பா.ஜ.க. விவசாய சங்கம், ஒருங்கிணைந்த 5 மாவட்ட விவசாய சங்கம் சார்பில் வீரபாண்டி முல்லைப்பெரியாற்று பாலத்தில் இருந்து மேள, தாளம் முழங்க பென்னிகுயிக் சிலை ஊர்வலமாக பெரியாற்றின் கரை வரை கொண்டு செல்லப்பட்டது. பின்னர் முல்லைப்பெரியாறு அணையை கட்டியதற்காக நன்றி தெரிவிக்கும் வகையில் பென்னிகுயிக் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதையடுத்து பா.ஜ.க.வினர், விவசாய சங்கத்தினர் ஏராளமானோர் முல்லைப்பெரியாற்றில் தீபம் ஏற்றி, மலர்தூவி வழிபாடு நடத்தினர்.


Related Tags :
Next Story