நெகமத்தில் நவராத்திரி விழாவையொட்டி சவுடாம்பிகையம்மன் கோவிலில் பக்தர்கள் கத்திப்போட்டு வழிபாடு
நெகமம்
நெகமம் சவுடாம்பிகையம்மன் கோவிலில் நவராத்திரி விழாவையொட்டி பக்தர்கள் கத்திப்போட்டு வழிபாடு நடத்தினார்கள்.
கத்திப்போட்டு வழிபாடு
நெகமம் சவுடாம்பிகையம்மன் கோவில் மிகவும் பழமைவாய்ந்த கோவிலாகும். இங்கு ஆண்டுதோறும் நவராத்திரி விழாவையொட்டி கத்திபோடும் விழா வெகு விமர்சையாக நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டும் கடந்த மாதம் 26- ந்தேதி காலை கணபதி ஹோமத்துடன் முதல் நவராத்திரி விழா தொடங்கியது. இரவு அலகு சேர்வை செய்து(கத்தி போடுதல்), சக்தி அழைத்து கொலு ஆரம்பிக்கப்பட்டது. 30-ந்தேதி மாலை பெண்கள் திருவிளக்கு பூஜை செய்தனர். 4- ந்தேதி இரவு 8 மணிக்கு சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை நடைபெற்றது. நேற்று காலை 9 மணிக்கு விநாயகர் கோவிலில் இருந்து ஊர்வலமாக சென்று அலகு சேர்வை செய்து சக்தி அழைத்து, முளைப்பாரி எடுத்து வரப்பட்டது.
அம்மன் திருவீதி உலா
கத்திபோடும் நிகழ்ச்சியில் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை 12 நாட்கள் விரதம் இருந்து தனது உடலை வருத்தி கத்திபோட்டு வந்தனர் இது பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைத்தது. மதியம் 1 மணிக்கு மாவிளக்கு பூஜை, ராகுதீப பூஜை, இரவு 9 மணிக்கு அம்பு சேர்வை, அம்மன் திருவீதி உலா, அலங்கார வாணவேடிக்கை, அபிசேக பூஜை, கொலு நிறைவு செய்தல் நடைபெற்றது. நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர்கள் செய்து இருந்தனர்.