வைகுண்ட ஏகாதசியையொட்டி சேலம் கோட்டை பெருமாள் கோவிலில் நாளை சொர்க்கவாசல் திறப்பு
வைகுண்ட ஏகாதசியையொட்டி சேலம் கோட்டை பெருமாள் கோவிலில் நாளை சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. பட்டை கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க 50 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
சொர்க்கவாசல் திறப்பு
சேலம் மாநகரில் பிரசித்திபெற்ற கோட்டை பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த மாதம் 22-ந் தேதி தொடங்கியது. இதையொட்டி தினமும் கோவிலில் சாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது. மாலை 5 மணிக்கு மேல் பெருமாள் திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளல், திருமொழி வேதபாராயணம் சேவித்தல், திருவாராதனம், தீபாராதனை உள்பட வழிபாடுகள் நடைபெறுகிறது.
வைகுண்ட ஏகாதசியின் சிகர நிகழ்ச்சியாக சொர்க்கவாசல் திறப்பு நாளை (திங்கட்கிழமை) நடக்கிறது. இதை முன்னிட்டு நேற்று ஆஞ்சநேயர் தங்ககவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
நாளை அதிகாலை 5 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது. தொடர்ந்து மூலவர் அழகிரிநாதர், தாயார், கருடாழ்வார், ஆஞ்சநேயர், ஆண்டாள், விஷ்ணு துர்க்கை ஆகிய சாமிகளுக்கு தங்க கவசம் சாத்துபடி செய்து சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) வரை பகல் பத்து உற்சவமும், நாளை முதல் 13-ந் தேதி வரை ராப்பத்து உற்சவமும் நடைபெறுகிறது.
முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
சொர்க்கவாசல் திறப்பு விழாவை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விழாவிற்கு சேலம் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்யும் வகையில் கோவிலுக்குள் மற்றும் வெளிப்புற பகுதியில் தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதனிடையே சொர்க்க வாசல் திறப்பை முன்னிட்டு கோட்டை பெருமாள் கோவிலில் சிறப்பு தரிசனம் செய்திட பக்தர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதாவது நாளை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை சாமி தரிசனம் செய்திட பக்தர்கள் சிறப்பு நுழைவுக்கட்டணமாக ஒரு நபருக்கு ரூ.25-யை ஆன்லைன் மூலம் செலுத்த இந்து சமய அறநிலையத்துறை ஏற்பாடு செய்தது.
இதனால் பலர் ஆன்லைனில் முன்பதிவு செய்து வருகிறார்கள். முன்பதிவு செய்ய கோட்டை பெருமாள் கோவிலிலும் சிறப்பு வசதி செய்யப்பட்டு உள்ளது.
50 ஆயிரம் லட்டு
மேலும் பொது தரிசனம் செய்யும் பக்தர்களுக்காக தனி வழியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல் சொர்க்க வாசல் திறப்பை முன்னிட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குவதற்காக சேலம் பட்டை கோவிலில் 50 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்தது.