கம்பத்தில்போக்குவரத்து விதிகளை மீறினால் ஆட்டோ பறிமுதல்:ஆர்.டி.ஓ. எச்சரிக்கை
கம்பத்தில் போக்குவரத்து விதிகளை மீறினால் ஆட்டோ பறிமுதல் செய்யப்படும் என்று ஆர்.டி.ஓ. எச்சரிக்கை விடுத்தார்.
கம்பம் நகரில் விதிகளை மீறி அதிகளவு பயணிகளை ஏற்றி செல்லும் ஆட்டோக்களால் விபத்து ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இதையடுத்து ஆட்டோ டிரைவர்களுடனான ஆலோசனை கூட்டம் நேற்று கம்பத்தில் நடந்தது. இதற்கு உத்தமபாளையம் வட்டார போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர் (ஆர்.டி.ஓ.) சுந்தராமன் தலைமை தாங்கினார். பின்னர் அவர் பேசும்போது, ஆட்டோக்களில் வாகன பதிவு சான்றில் அனுமதிக்கப்பட்ட நபர்களுக்கு மேல் ஆட்களை ஏற்றிச் சென்றால் அனுமதி சீட்டு ரத்து செய்யப்படும்.
டிரைவர்கள் ஆட்டோ ஓட்டும் போது சீருடை அணிந்திருப்பதோடு, வாகன பதிவு சான்று, இன்சூரன்ஸ் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் வைத்திருக்க வேண்டும். போக்குவரத்து விதிகளை மீறி செயல்படும் ஆட்டோ டிரைவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதுடன், வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று அவர் எச்சரித்தார். இந்த கூட்டத்தில் கம்பம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தாமரைக்கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் ஞானபண்டித நேரு மற்றும் ஆட்டோ டிரைவர்கள் கலந்து கொண்டனர்.