திருச்செந்தூர் ரெயில் நிலையத்திற்கு செல்லும் சாலையில் குளம்போல் தேங்கி கிடக்கும் மழைநீர்


திருச்செந்தூர் ரெயில் நிலையத்திற்கு செல்லும் சாலையில்  குளம்போல் தேங்கி கிடக்கும் மழைநீர்
x
தினத்தந்தி 3 Dec 2022 6:45 PM GMT (Updated: 3 Dec 2022 6:45 PM GMT)

திருச்செந்தூரில் ரெயில் நிலையத்திற்கு செல்லும் சாலையில் குளம்போல் தேங்கி கிடக்கும் மழைநீரை உடனடியாக சரிசெய்ய பக்தர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூரில் ரெயில் நிலையத்திற்கு செல்லும் சாலையில் குளம்போல் தேங்கி கிடக்கும் மழைநீரை உடனடியாக சரிசெய்ய பக்தர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புகழ்பெற்ற திருச்செந்தூர்

புகழ் பெற்ற ஆன்மிக ஸ்தலமாக திருச்செந்தூர் விளங்குகிறது. இங்கு முருகப்பெருமான் சுப்பிரமணிய சுவாமியாக காட்சி அளிக்கிறார். தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் திருச்செந்தூருக்கு வந்து‌ செல்கின்றனர்.

மேலும் திருச்செந்தூரில் இருந்து தினமும் 7 ரெயில்கள் இயக்கப்படுகிறது. அதாவது, திருச்செந்தூரில் இருந்து தினமும் காலை 7.10, 10.15 மணிக்கு பயணிகள் ரெயில் நெல்லை செல்கிறது. பகல் 12.05 மணிக்கு பாலக்காடுக்கும், மதியம் 2.10 மணிக்கு நெல்லை வழியாக வாஞ்சி மணியாச்சிக்கும் ரெயில் புறப்படுகிறது. மாலை 4.25 மணிக்கு, 6.5 மணிக்கு பயணிகள் ரெயில் நெல்லைக்கும், இரவு 7.10 மணிக்கு சென்னைக்கு செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலும் என 7 ரெயில்கள் இயக்கப்படுகிறது.

அதேபோல் திருச்செந்தூருக்கு காலை 8.10 மணிக்கு சென்னையில் இருந்து செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலும், 9, 11.45 மணிக்கு நெல்லையில் இருந்து பயணிகள் ரெயிலும் வருகிறது. பின்னர் பகல் 1 மணிக்கு வாஞ்சி மணியாச்சியில் இருந்தும், மாலை 3.30 மணிக்கு பாலக்காட்டில் இருந்தும், இரவு 8.30 மணிக்கு நெல்லையில் இருந்தும் பயணிகள் ரெயில்கள் வருகிறது. இந்த ரெயில்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் திருச்செந்தூருக்கு வந்து செல்கிறார்கள்.

சீரமைக்க கோரிக்கை

இந்நிலையில் திருச்செந்தூர் பகத்சிங் பஸ்நிலையம் எதிர்புறம் ெரயில் நிலையத்திற்கு செல்லும் சாலை சில ஆண்டுகளாக குண்டும், குழியுமாக உள்ளது. மழை காலங்களில் இந்த பாதையில் மழைநீர் குளம் போல் தேங்கி விடுகின்றன. தற்போது பெய்த மழையாலும் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. இதனால் ெரயில் நிலையத்திற்கு நடந்து செல்லும் பொதுமக்கள், பக்தர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். அதே நேரத்தில் சேறும், சகதியுமாக காணப்படுவதால் அதில் நடந்து செல்பவர்களுக்கு நோய் தொற்று ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

எனவே பொதுமக்கள், பக்தர்கள் நலன் கருதி சில ஆண்டுகள் சரி செய்யாமல் இருக்கும் ரெயில் நிலையத்திற்கு செல்லும் சாலையை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, உடனடியாக சரிசெய்ய வேண்டும் என பொதுமக்களும், பக்தர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story