சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டோர் மீதுபோலீசார் அதிரடி நடவடிக்கை


சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டோர் மீதுபோலீசார் அதிரடி நடவடிக்கை
x
தினத்தந்தி 24 Oct 2023 6:45 PM GMT (Updated: 24 Oct 2023 6:45 PM GMT)

சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டோர் மீது போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை

கைது நடவடிக்கை

மயிலாடுதுறை மாவட்ட போலீசாரால் மாவட்டம் முழுவதும் கடந்த 21, 22-ந் தேதி ஆகிய இரு தினங்களில் சட்ட விரோதமாக மணல் கடத்துவோர், கள்ள சாராயம் விற்பனை செய்வோர், தடைசெய்யப்பட்ட லாட்டரி டிக்கெட், கஞ்சா, குட்கா, புகையிலை பொருட்கள் விற்பனை செய்வோர், சூதாட்டங்களில் ஈடுபடும் நபர்கள், குடிபோதையில் வாகனம் ஓட்டுவோர் மற்றும் பிடிவாரண்ட் எதிரிகளுக்கு எதிரான சிறப்பு வேட்டை நடத்தப்பட்டது.

இதில் மணல்மேடு போலீஸ் நிலைய சரகத்தில் 2 மாட்டு வண்டிகளில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 2 பேர் மீதும், மணல்மேடு, சீர்காழி, ஆணைக்காரன்சத்திரம் ஆகிய போலீஸ் நிலைய சரகங்களில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 5 பேர் மீதும், மணல்மேடு, பூம்புகார், ஆணைக்காரன்சத்திரம் ஆகிய போலீஸ் நிலைய சரகங்களில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 20 நபர்கள் மீது 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்த 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்யபட்டுள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் சட்ட விரோதமாக குட்கா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த 57 நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சட்டவிரோதமாக கள்ள சாராய விற்பனையில் ஈடுபட்ட 32 பேர்களும், 2 கோர்ட்டு வாரண்ட் எதிரிகளும் கைது செய்யபட்டு கோர்ட்டு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

1070 வழக்குகள்

மாவட்டம் முழுவதும் கடந்த இருதினங்களில் சாலை விதிகளை பின்பற்றாத நபர்கள் மீது 1070 வழக்குகளும், குடிபோதையில் வாகனம் ஒட்டியவர்கள் மீது 54 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் சட்ட விரோத செயல்களுக்கு எதிரான சிறப்பு வேட்டை மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெறும் எனவும், சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் பற்றிய தகவல்களை 8438456100 என்ற வாட்சப் எண்ணிலும், 9442626792 என்ற செல்போன் எண்ணிலும் தெரிவிக்கலாம் எனவும், தகவல் அளிப்பவர்களின் விவரங்கள் பாதுகாக்கப்படும் என்று மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story