சில்லரை விற்பனை விலையில் ஒரு கிலோ தக்காளி ரூ. 100-ஐ எட்டியுள்ளதால் குடும்பத்தலைவிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சில்லரை விற்பனை விலையில் ஒரு கிலோ தக்காளி ரூ. 100-ஐ எட்டியுள்ளதால் குடும்பத்தலைவிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
போடிப்பட்டி,
சில்லரை விற்பனை விலையில் ஒரு கிலோ தக்காளி ரூ. 100-ஐ எட்டியுள்ளதால் குடும்பத்தலைவிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மாற்றுப்பயிர்
மடத்துக்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காய்கறிகள் சாகுபடி அதிக அளவில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக தக்காளி சாகுபடியில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வந்தனர்.
இந்தநிலையில் சமீப காலங்களாக தக்காளிக்கு உரிய விலை கிடைக்காத நிலையால் விவசாயிகள் விரக்தியடையும் சூழல் உருவானது. இதனால் பல விவசாயிகள் தக்காளி சாகுபடியைக் கைவிட்டு மாற்றுப்பயிர் சாகுபடி செய்யத் தொடங்கினர்.ஒரு கிலோ தக்காளி ரூ. 5-க்கும் குறைவாக விற்ற நிலையால் நஷ்டத்தை சந்தித்த விவசாயிகள் பலரும் டிராக்டர் மூலம் தக்காளிப் பயிர்களை அழித்த அவலமும் அரங்கேறியது.
இப்படிப்பட்ட நிலையால் தக்காளி வரத்து குறைந்து சமீப காலங்களாக தக்காளிக்கு ஓரளவு விலை கிடைத்து வந்தது.ஆனால் எதிர்பாராதவிதமாக தக்காளி விலை திடீர் உச்சத்தைத் தொட்டுள்ளது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரத்தில் சில்லறை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ. 40 முதல் 50 வரை விற்ற நிலையில் ஒரே நாளில் ரூ. 100 ஆக உயர்ந்துள்ளது இல்லத்தரசிக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
கமிஷன் மண்டிகள்
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
மடத்துக்குளம் பகுதியில் உற்பத்தியாகும் தக்காளிப்பழங்களை உடுமலை மொத்த விற்பனை சந்தைக்கு கொண்டு சென்று கமிஷன் மண்டிகள் மூலம்விற்பனை செய்கிறோம். சுமார் 14 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ. 50 முதல் 100-க்கு விற்பனையானதால் போக்குவரத்து செலவுக்குக் கூட கட்டுப்படியாகாத நிலையே இருந்தது. கடந்த சில நாட்களாக தக்காளி விலை படிப்படியாக உயர்ந்து ஒரு பெட்டி ரூ. 450 முதல் ரூ.600 வரை விற்பனையானது. இது இழப்பில் தவித்த விவசாயிகளுக்கு ஆறுதல் தரும் விலையாக இருந்தது.ஆனால் தற்போது இன்ப அதிர்ச்சியாக ஒரு பெட்டி தக்காளி ரூ. 1100 வரை விற்பனையாகியுள்ளது. இந்த திடீர் விலை உயர்வுக்கு கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்து அதிக எண்ணிக்கையிலான வியாபாரிகள் வரத் தொடங்கியதே காரணமாக கூறப்படுகிறது.
இதே நிலை நீடித்தால் தொடர்ந்து தக்காளிக்கு நல்ல விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு விவசாயிகள் மத்தியில்ஏற்பட்டுள்ளது.ஆனாலும் எல்லா சீசனிலும் தக்காளி உள்ளிட்ட காய்கறிகளுக்கு உரிய விலை கிடைக்க அரசு வகை செய்வதன் மூலமே விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக்காப்பாற்ற முடியும். இவ்வாறு விவசாயிகள் கூறினர்.