சென்னையில் ரூ.500 கோடி மோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது


சென்னையில் ரூ.500 கோடி மோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது
x

சென்னையில் ரூ.500 கோடி மோசடி வழக்கில் மேலும் ஒரு முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டார்.

சென்னை,

சென்னை கீழ்ப்பாக்கத்தில் ஹிஜாவு அசோசியேட்ஸ் என்ற தொழில் நிறுவனம் செயல்பட்டு வந்தது. அந்த நிறுவனம், பல்வேறு தொழில்களை செய்து வருவதாகவும், தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்தால் 15 சதவீதம் வட்டி வழங்கப்படும் என்றும், மாதந்தோறும் வட்டிப்பணம் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப்படும், என்றும் கவர்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டது. அதை நம்பி ஏராளமான பேர், அந்த நிறுவனத்தில் முதலீட்டு தொகையை கொண்டு கொட்டினார்கள்.

ஆனால் அறிவித்தபடி அந்த நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு வட்டி தொகையை கொடுக்கவில்லை. அசல் தொகைக்கும் பட்டை நாமம் போட்டுவிட்டது. ஏமாற்றம் அடைந்த வாடிக்கையாளர்கள் முதல் கட்டமாக 1,500 பேர், பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்துள்ளனர். தற்போது 4,500 பேரிடம் பணத்தை சுருட்டியது அம்பலமாகி உள்ளது.

மோசடி தொகையும் ரூ.360 கோடியில் இருந்து ரூ.500 கோடி அளவுக்கு உயர்ந்துள்ளது. இதுதொடர்பாக இந்த நிறுவனத்தின் இயக்குனர்கள் அலெக்சாண்டர், சவுந்திரராஜன் உள்ளிட்ட 21 பேர் மீது பொருளாதார குற்றப்பிரிவுபோலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

மேலும் ஒரு முக்கியகுற்றவாளி கைது

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முக்கிய புள்ளி நேரு (வயது 49) என்பவர் கடந்த 16-ந்தேதி சென்னையில் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணை அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களின் வீடுகள் உள்ளிட்ட 32 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

இந்த சோதனையில் வழக்கிற்கு தேவையான முக்கிய ஆவணங்கள் சிக்கியது. இந்த நிலையில் இந்த வழக்கில் நேற்று முன்தினம் மேலும் ஒரு முக்கிய குற்றவாளியான மணிகண்டன் (51) என்பவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். இவர் சென்னை கோடம்பாக்கம் பாரதீஸ்வரர் காலனியைச்சேர்ந்தவர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள இதர 19 குற்றவாளிகளையும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தேடி வருகிறார்கள்.

1 More update

Next Story