ஒரு நம்பர் லாட்டரி சீட்டு விற்பவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்


ஒரு நம்பர் லாட்டரி சீட்டு விற்பவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
x

ஒரு நம்பர் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபடுபவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சென்னை,

ஒரு நம்பர் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபடுபவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அ.தி.மு.க. ஆட்சியில் காவல் துறை சுதந்திரமாகப் பணிபுரிய அனுமதித்ததன் விளைவாக, பொதுமக்களுக்கு தீங்கு ஏற்படுத்தும் ஒரு நம்பர் லாட்டரி விற்பனை மற்றும் போதைப் பொருட்கள் விற்பனை போன்றவைகள் கட்டுப்படுத்தப்பட்டு இருந்தன. முக்கியமாக, பகல் முழுவதும் வியர்வை சிந்தி உழைக்கும் தொழிலாளர்களின் உழைப்பில் வந்த பணம், லாட்டரி என்ற அரக்களிடம் சிக்கிச் சீரழிவதைத் தடுக்க ஜெயலலிதா லாட்டரிச் சீட்டு தடைச் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்தினார்.

ஆனாலும், கள்ளத்தனமாக வாட்டரி விற்பனை ஆங்காங்கே நடைபெற்று வருவதை அறிந்த அ.தி.மு.க. அரசு, ஒரு நம்பர் லாட்டரி விற்பனையில் ஈடுபடுவோரை, அவர்கள் யாராக இருந்தாலும், இரும்புக் கரம் கொண்டு அடக்கவும், குண்டர் சட்டத்தில் கைது செய்யவும், காவல் துறையினருக்கு முழு சுதந்திரம் வழங்கி இருந்தது. இதன் காரணமாக, அ.தி.மு.க. அரசில் ஒரு நம்பர் லாட்டரி விற்பனை இல்லாமல் இருந்தது.

ஆனால், தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்தவுடன், ஒரு நம்பர் லாட்டரி என்ற அரக்கனிடம் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் சிக்கிச் சீரழிந்து வருகின்றனர். இதைத் தடுக்க, இந்த விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி, பேட்டி மற்றும் அறிக்கை வாயிலாக அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தும், இதுவரை அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தமிழகத்தில் பல்வேறு நகரங்களிலும், குறிப்பாக, தலைநகர் சென்னையின் அனைத்துப் பகுதிகளிலும் ஒரு நம்பர் லாட்டரி விற்பனையாகிறது என்று நாளிதழ்கள் மற்றும் தனியார் ஊடகங்களில் செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. ஒருசில காவல் துறையினர் மற்றும் ஆளும் கட்சி நிர்வாகிகள் உதவி இல்லாமல் ஒரு நம்பர் லாட்டரி விற்பனை சாத்தியமில்லை என்பதை அனைவரும் அறிவார்கள்.

'ஆப்பரேஷன் வெற்றி-நோயாளி மரணம்" என்பதுபோல் தான் தற்போதைய காவல் துறையினரின் நடவடிக்கைகள் இருக்கிறது. ஒருபக்கம் ஆப்பரேஷன், மறுபக்கம் குற்றங்கள் பெருகி வருகின்ற நிலை, தி.மு.க. அரசின் நிர்வாகத் திறமை இன்மையை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.

எனவே, மக்களின் வரிப் பணத்தில் இயங்கும் காவல் துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதித்து, ஒரு நம்பர் லாட்டரிச் சீட்டு மற்றும் எந்தவிதமான இதர லாட்டரிச் சீட்டுகள் விற்பனையில் ஈடுபட்டு வருபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை சட்டத்தின் பிடியில் உடனடியாகக் கொண்டுவர வேண்டும் என்றும், இச்செயல்களில் ஈடுபடுவோர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story