உலகில் 6 நொடிக்கு ஒருவர் உயிரிழக்கிறார்
புகை பழக்கத்தால் உலகில் 6 நொடிக்கு ஒருவர் உயிரிழப்பதாக புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்து கலெக்டர் அரவிந்த் பேசினார்.
நாகர்கோவில்:
புகை பழக்கத்தால் உலகில் 6 நொடிக்கு ஒருவர் உயிரிழப்பதாக புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்து கலெக்டர் அரவிந்த் பேசினார்.
விழிப்புணர்வு பேரணி
குமரி மாவட்ட சமூக நலத்துறை சார்பில் உலக புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு இருந்து தொடங்கியது. போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத் முன்னிலை வகித்தார். கலெக்டர் அரவிந்த் கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
உலக சுகாதார நிறுவனத்தால் ஒவ்வொரு ஆண்டும் உலக புகையிலை தினம் மே மாதம் 31-ந் தேதி கடைபிடிக்கப்படுகிறது. புகையிலை குறித்தும், புகைப்பதனால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்தும் இளைய தலைமுறையினரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த நாளை புகையிலை எதிர்ப்பு நாளாக உலகெங்கும் கடைபிடிக்கின்றனர்.
சிகரெட் புகைக்கப்படும் போது தோராயமாக ஒருவர் தன் ஆயுட் காலத்தின் 11 நிமிடங்களை இழக்கிறார். புகையிலையால் 6 நொடிப்பொழுதிலும் உலகில் ஒரு உயிர் இழப்பு ஏற்படுகிறது.
போதையில்லா குமரி
குமரி மாவட்டத்தில் போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் முனைப்புடன் செயலாற்றி வருகிறோம்.
போதைப்பொருள் பயன்படுத்தினால் தனக்கும், தன்னை சார்ந்தவர்களையும், சமூகத்தையும் பாதிக்கும் என்பதை அனைவரும் உணர வேண்டும். குமரி மாவட்டம் போதைப்பொருள் இல்லா மாவட்டமாக திகழ அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு கலெக்டர் அரவிந்த் கூறினார்.
உறுதிமொழி ஏற்பு
முன்னதாக, கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நடந்த உலக புகையிலை எதிர்ப்பு தின நாள் உறுதிமொழியினை கலெக்டர் அரவிந்த் தலைமையில் அனைத்து அரசு அதிகாரிகளும் எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து கலெக்டர் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் அரசு வாகனங்களில் புகையிலை பயன்பாட்டால் ஏற்படும் விளைவுகள் குறித்த விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டினார்கள்.
தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து மாவட்ட சமூக நலத்துறையால் நடத்தப்பட்ட பேரணியில் 250 கல்லூரி மாணவ-மாணவியர் மற்றும் 50-க்கும் மேற்பட்ட பணியாளர்கள், தன்னார்வலர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். விழிப்புணர்வு பேரணியானது கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கி எஸ்.எல்.பி. பள்ளியில் முடித்து வைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட சமூகநல அதிகாரி சரோஜினி, துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) மீனாட்சி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி புகழேந்தி, ஏ.எம்.கே. மது போதை மறுவாழ்வு மைய இயக்குனர் அருள்ஜோதி மற்றும் தொண்டு நிறுவனத்தினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.