1 டன் குட்கா, 120 மதுபாட்டில்கள் பறிமுதல்


1 டன் குட்கா, 120 மதுபாட்டில்கள் பறிமுதல்
x

தஞ்சையில் தனிப்படை போலீசார் அதிரடியாக சோதனை நடத்தி வீட்டில் பதுக்கி வைத்து இருந்த 1 டன் குட்காவையும், 120 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக காருடன் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

தஞ்சாவூர்


தஞ்சையில் தனிப்படை போலீசார் அதிரடியாக சோதனை நடத்தி வீட்டில் பதுக்கி வைத்து இருந்த 1 டன் குட்காவையும், 120 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக காருடன் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

வீட்டில் குட்கா பதுக்கல்

தஞ்சை மாவட்டத்தில் கஞ்சா, குட்கா, லாட்டரி விற்பனையை தடுக்கவும், இவைகளை விற்பனை செய்பவர்களை கைது செய்யவும் போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி தனிப்படைகள் அமைக்கப்பட்டு, மாவட்டம் முழுவதும் தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்தநிலையில் தஞ்சை கரந்தை பகுதியில் ஒரு வீட்டில் தமிழகஅரசால் தடை செய்யப்பட்டுள்ள குட்கா மூட்டை, மூட்டையாக பதுக்கி வைக்கப்பட்டு, மாநகரில் உள்ள கடைகளுக்கு வினியோகம் செய்யப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதிரடி சோதனை

அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் குமார் தலைமையில் ஏட்டுகள் உமாசங்கர், ராஜேஷ், போலீஸ்காரர்கள் அருள்மொழிவர்மன், அழகுநவீன், சுஜித் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் கரந்தை பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.அப்போது கரந்தை கொடிக்காரதெருவில் உள்ள ஒரு வீட்டில் தான் குட்கா பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த வீட்டிற்குள் தனிப்படை போலீசார் அதிரடியாக நுழைந்து தீவிர சோதனை செய்தனர். அங்கு மூட்டை, மூட்டையாக குட்கா பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததுடன் புல் மதுபாட்டில்களும் அதிகஅளவில் இருந்தன.

குட்கா, மதுபாட்டில்கள் பறிமுதல்

கர்நாடக மாநிலம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தி வரப்பட்டு தஞ்சை மாநகரில் இயங்கும் ஒரு மதுபான பாரில் வைத்து கட்டிங் கேட்கும் மதுப்பிரியர்களுக்கு விற்பனை செய்வதற்காக வைக்கப்பட்டு இருந்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து குட்கா மற்றும் மதுபாட்டில்களையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மொத்தம் 1,000 கிலோ குட்காவும், 120 வெளிமாநில புல் மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.மேலும் கடத்தலில் ஈடுபட்டதாக கரந்தை கொடிக்காரத்தெருவை சேர்ந்த ரமேஷ் மகன் பிரபு (வயது29) என்பவரை தனிப்படை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் குட்காவை மாநகரில் உள்ள பல்வேறு சிறு கடைகளுக்கு அதிகாலை நேரத்தில் அனுப்பி வைப்பதும், குட்கா, மதுபாட்டில்கள் வெளிமாநிலங்களில் இருந்து கடத்தி வரப்படுவதும் தெரியவந்தது.இந்த தகவலை அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவர், பிரபுவை கைது செய்து கிழக்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். இந்த கடத்தலில் தொடர்புடையவர்களை கைது செய்ய போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story