ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு ஓராண்டு சிறை
பெண்ணை தாக்கிய வழக்கில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு ஓராண்டு சிறை விதித்து கூடுதல் மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
பெரம்பலூர் மாவட்டம் நூத்தப்பூர் கிராமத்தை சேர்ந்த சிவக்குமாரின் மனைவி வசந்தி. இவர் கடந்த 2020-ம் ஆண்டு நிலப்பிரச்சினையில் தன்னை சிலர் தாக்கி விட்டதாக கை.களத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் கருப்பையா (வயது 70), அவரது மனைவி சின்னப்பிள்ளை (63), மகன்கள் செல்லையா (45), முத்துசாமி (40), செல்லையாவின் மனைவி வனிதா (38) மற்றும் சிறுவன் ஒருவர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை முடித்து குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மேற்படி வழக்கானது பெரம்பலூர் கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில் நேற்று வழக்கின் விசாரணை முடித்து குற்ற விசாரணை முறை சட்டத்தின்படி குற்றவாளிகள் கருப்பையா, சின்னபிள்ளை, செல்லையா, முத்துசாமி, வனிதா ஆகிய 5 பேருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை வழங்கி நீதிபதி (பொறுப்பு) சங்கீதா தீர்ப்பு அளித்தார். மேற்படி வழக்கில் சிறப்பாக செயல்பட்ட கை.களத்தூர் போலீசார் மற்றும் நீதிமன்ற போலீசாரை பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி பாராட்டினார்.