திண்டுக்கல் மார்க்கெட்டில் வெங்காயம் விலை உயர்வு


திண்டுக்கல் மார்க்கெட்டில் வெங்காயம் விலை உயர்வு
x
தினத்தந்தி 27 May 2023 12:30 AM IST (Updated: 27 May 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

வரத்து குறைந்ததால் திண்டுக்கல் மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் விலை உயர்ந்துள்ளது. கிலோ ரூ.65-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

திண்டுக்கல்

வெங்காய மார்க்கெட்

திண்டுக்கல் மேற்கு மீனாட்சிநாயக்கன்பட்டியில் தரகுமண்டி வணிக வளாகத்தில் வெங்காய மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட் வாரத்தில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய 3 நாட்கள் மட்டுமே செயல்படும். திண்டுக்கல், தேனி, திருச்சி, கோவை, திருப்பூர், பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சின்ன வெங்காயம் மார்க்கெட்டிற்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

இதேபோல், கர்நாடகா, மராட்டிய மாநிலம் போன்ற வெளி மாநிலங்களில் இருந்து பல்லாரி (பெரிய வெங்காயம்) மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக கோடை மழை விட்டு விட்டு பெய்தது. இதன் காரணமாக சின்ன வெங்காயம் விளைச்சல் பெருமளவு பாதிக்கப்பட்டது. மேலும் விளைநிலங்களில் மழைநீர் தேங்கியதால் வெங்காயம் செடிகளிலேயே அழுகி வீணாகியது.

வரத்து குறைந்தது

இதன் காரணமாக திண்டுக்கல் வெங்காய மார்க்கெட்டுக்கு சின்ன வெங்காயம் வரத்து குறைந்தது. வழக்கமாக 7 ஆயிரம் மூட்டைகள் முதல் 8 ஆயிரம் மூட்டைகள் வரை சின்ன வெங்காயம் மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டுவரப்படும். (ஒரு மூட்டையில் 50 கிலோ சின்ன வெங்காயம் இருக்கும்) அப்போது தேவை மற்றும் வரத்தை பொறுத்து விலை நிர்ணயம் செய்யப்படும்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.20 முதல் ரூ.30 வரை விற்பனை ஆனது. ஆனால் தற்போது சின்ன வெங்காயம் வரத்து குறைந்ததால் ஒரு கிலோ ரூ.55 முதல் ரூ.65 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை ஏற்றம் இன்னும் ஒரு மாதத்திற்கு நீடிக்கும் என்றும், வெளி மாநிலங்களில் இருந்து வெங்காய வரத்து அதிகரித்ததும் விலை குறைய வாய்ப்பு உள்ளது என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.


Next Story