திருகல் நோயால் சின்ன வெங்காயம் விளைச்சல் பாதிப்பு


திருகல் நோயால் சின்ன வெங்காயம் விளைச்சல் பாதிப்பு
x

திருகல் நோயால் சின்ன வெங்காயம் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர்

சின்ன வெங்காயம் சாகுபடி

இல்லத்தரசிகளின் சமையலில் முக்கிய உணவு பொருளாக சின்ன வெங்காயம் விளங்குகிறது. அத்தகைய சின்ன வெங்காயம் தமிழகத்திலேயே பெரம்பலூர் மாவட்டத்தில் தான் அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

மேலும் சின்ன வெங்காய உற்பத்தியில் தமிழகத்தில் தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டம் முதலிடம் வகித்து வருகிறது. இந்த ஆண்டும் மாவட்டத்தில் பெரும்பாலான விவசாயிகள் சின்ன வெங்காயம் சாகுபடி செய்துள்ளனர்.

திருகல் நோய்

இந்நிலையில் இந்த ஆண்டு ஏற்கனவே சின்ன வெங்காயத்தில் வேரழுகல் நோய் எனப்படும் திருகல் நோய் தாக்குதலினால் விளைச்சல் பாதிக்கப்பட்டது. தற்போது பெய்த வடகிழக்கு பருவமழையினால் வயலில் தண்ணீர் தேங்கியதால் சின்ன வெங்காய பயிரில் திருகல் நோயால் பாதிக்கப்பட்டு வருகிறது.

தற்போது சின்ன வெங்காயத்துக்கு நல்ல விலை இருக்கும்போது, பயிர்களை திருகல் நோய் தாக்கி விளைச்சல் பாதிக்கப்பட்டு வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

விளைச்சல் பாதிப்பு

ஆலத்தூர் தாலுகா, நாட்டார்மங்கலத்தை சேர்ந்த குமார்:- தற்போது சின்ன வெங்காயம் சாகுபடி செய்து 40 நாட்கள் ஆகிறது. 60 நாள் பயிரான சின்ன வெங்காயத்தை இன்னும் 20 நாட்களில் அறுவடை செய்ய இருந்தோம். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் சின்ன வெங்காய பயிர் திருகல் நோய் தாக்குதலுக்கு உள்ளாகி விளைச்சல் பாதிக்கப்பட்டு வருகிறது. தற்போது சின்ன வெங்காயம் திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் கிலோ ரூ.100 வரை விற்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. மழைக்காலம் என்பதால் அதன் விலை இன்னும் அதிகரிக்கலாம் என்பதால், தற்போது முதல் தர சின்ன வெங்காயத்தை விவசாயிகளிடம் இருந்து 1 கிலோ ரூ.80 வரை கொடுத்து வியாபாரிகள் கொள்முதல் செய்ய முன்வருகிறார்கள். நல்ல விலை இருந்தும் தற்போது திருகல் நோயால் விளைச்சல் பாதிக்கப்பட்டு வருவது வேதனையாக உள்ளது. ஏற்கனவே விதை வெங்காயம் விலையேற்றம், ஆட்கள் பற்றாக்குறை, கூலி உயர்வு, மருந்து, உரங்களின் விலை உயர்வு போன்ற பல்வேறு இடையூறுகளை விவசாயிகள் சந்தித்து சின்ன வெங்காயத்தை சாகுபடி செய்தனர். எனவே திருகல் நோயால் பாதிக்கப்பட்ட சின்ன வெங்காய பயிர்களை மாவட்ட தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கணக்கெடுத்து, விவசாயிகளுக்கு அரசின் நிவாரண தொகையை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குறைந்தபட்ச ஆதார விலை

இரூரை சேர்ந்த ராமச்சந்திரன்:- திருகல் நோய் தாக்காமல் இருக்க பரிசோதனை செய்த தரமான விதை வெங்காயத்தை விவசாயிகளுக்கு மானிய விலையில் விற்பனை செய்ய தோட்டக்கலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே வட்டிக்கு கடன் வாங்கியும், கடந்த ஆண்டு சின்ன வெங்காயத்துக்கு பயிர் காப்பீடு செய்ததால், அதன் மூலம் இழப்பீடாக கிடைத்த தொகையை வைத்தும் விவசாயிகள் இந்த ஆண்டு சாகுபடி செய்தனர். தற்போது வடகிழக்கு பருவமழையால் சின்ன வெங்காய விளைச்சல் பெரிதும் பாதிப்படைய வாய்ப்புள்ளது. எனவே தமிழக அரசு திருகல் நோயால் சின்ன வெங்காயம் விளைச்சல் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் மத்திய அரசு சின்ன வெங்காயத்துக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்யணம் செய்ய வேண்டும்.

ரேஷன் கடைகளில் விற்பனை

செட்டிகுளத்தை சேர்ந்த வேம்பு செல்வராஜ்:- திருகல் நோயால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கூட்டுறவு கடன் சங்கங்களில் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். விலை உயர்வை கட்டுப்படுத்த ரேஷன் கடைகளில் சின்ன வெங்காயத்தை விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். செட்டிகுளத்தில் உள்ள சின்ன வெங்காய சேமிப்பு கிடங்கை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். செட்டிகுளம் சின்ன வெங்காயம் வணிக வளாகத்தில் அனைத்து அரசு வேலை நாட்களில் ஏலம் நடத்த வேண்டும். சின்ன வெங்காயம் அதிகம் சாகுபடியாகும் பெரம்பலூர் மாவட்டத்தில் சின்ன வெங்காயத்தில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்க தொழிற்சாலை தொடங்க வேண்டும். செட்டிகுளத்தில் சின்ன வெங்காயத்துக்கு ஆராய்ச்சி நிலையம் தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story