கனரக வாகனங்களுக்குஆன்லைனில் அபராதம் விதிக்கும் முறையை ரத்து செய்ய வேண்டும்போலீஸ் சூப்பிரண்டிடம், லாரி உரிமையாளர்கள் மனு


கனரக வாகனங்களுக்குஆன்லைனில் அபராதம் விதிக்கும் முறையை ரத்து செய்ய வேண்டும்போலீஸ் சூப்பிரண்டிடம், லாரி உரிமையாளர்கள் மனு
x
தினத்தந்தி 24 Jan 2023 12:15 AM IST (Updated: 24 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

கனரக வாகனங்களுக்கு ஆன்லைனில் அபராதம் விதிக்கும் முறையை ரத்து செய்ய வேண்டும் என நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வனிடம் லாரி உரிமையாளர்கள் மனு கொடுத்தனர்.

லாரி உரிமையாளர்கள் மனு

தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன பொருளாளர் தாமு (என்கிற) தாமோதரன் தலைமையில், பல்வேறு லாரி உரிமையாளர் சங்கத்தினர் நேற்று நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் திரண்டு வந்து போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வனிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கனரக வாகனங்களுக்கு ஆன்லைனின் அபராதம் விதிப்பது தற்போது அதிகரித்து வருகிறது. சாலையோரம், பெட்ரோல் பங்குகளில் நிறுத்தப்பட்டு இருக்கும் வாகனங்கள் மற்றும் சாலைகளில் சென்று கொண்டிருக்கும் வாகனங்களின் பதிவு எண்ணை மட்டும் குறித்து வைத்து கொண்டு என்ன குற்றம் என கூறாமல், `ஜெனரல் அப்ன்ஸ்' என்று அபராதம் விதிக்கப்படுகிறது.

முரணான காரணங்கள்

மேலும் ஒப்பந்த அடிப்படையில் வடமாநிலங்களில் இயங்கி கொண்டிருக்கும் வாகனங்களுக்கு தமிழகத்தில் அபராதம் விதிக்கப்படுகிறது. சாலை விதிகளை பின்பற்றவில்லை. சீட் பெல்ட் அணியவில்லை. ஹெல்மெட் அணியவில்லை என்பது போன்ற முரணான காரணங்களுக்காக அபராதங்கள் விதிக்கப்படுகிறது.

இவ்வாறு விதிக்கப்படும் அபராதங்கள் சம்பந்தமாக வாகன உரிமையாளர், வாகனத்துக்கான காலாண்டு வரி, தகுதி சான்றிதழ், பெர்மிட்டுகள் பெறுவதில் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகும் நிலை ஏற்படுகிறது.

ரத்து செய்ய வேண்டும்

அதனால் இதுபோன்ற ஆன்லைன் அபராதங்கள் விதிக்கும் முறையை ரத்து செய்து, வாகனத்தை நிறுத்தி ஆவணங்கள் உள்ளிட்டவற்றை சரிபார்த்து குற்றம் இருந்தால், அபராதம் விதிக்கும் பட்சத்தில் டிரைவரின் கையெழுத்துடன் என்ன குற்றம், டிரைவர் பெயர், லைசென்ஸ் எண்ணையும் ரசீதில் குறிப்பிட வேண்டும்.

இதுபோன்ற ஆன்லைன் அபராத முறையை ரத்து செய்து, நலிந்து வரும் லாரி தொழிலை காத்து, வாகன உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இதில் நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கம், தென்மண்டல பல்க் எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம், டிரெய்லர் லாரி உரிமையாளர்கள் சங்கம், திருச்செங்கோடு லாரி மற்றும் ரிக் உரிமையாளர்கள் சங்கம், ராசிபுரம் மற்றும் பரமத்திவேலூர் லாரி உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story