ஆன்லைன் ரம்மி தடை சட்டம் - பரிந்துரை குழு இன்று அறிக்கை சமர்பிப்பு
ஆன்லைன் ரம்மியை தடை செய்ய அமைக்கப்பட்ட பரிந்துரை குழுவின் அறிக்கை முதல்-அமைச்சரிடம் இன்று சமர்பிக்கப்பட உள்ளது.
சென்னை,
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டினால் பலர் ஈர்க்கப்பட்டு அதை விளையாடி வருகின்றனர். ஆனால் சிலர் அதற்கு முழுவதும் அடிமையாகி அதிக பணத்தை வைத்து விளையாடுகின்றனர். ஆனால் விளையாட்டில் தோற்று பணத்தை இழப்பதினால் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாக ஆன்லைன் ரம்மி விளையாட்டினால் தற்கொலைகள் நிகழ்ந்தாலும் தற்போது அது அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 10-ந் தேதி முதல்-அமைச்சர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
அதில், ஆன்லைன் ரம்மி விளையாட்டினால் ஏற்படக்கூடிய நிதியிழப்பு மற்றும் தற்கொலை ஆகிய ஆபத்துகளை விளைவிக்கும் தன்மையைக் கண்டறியவும், பாதிப்புகளை உரிய தரவுகளுடன் ஆராயவும், அவற்றின் விளம்பரங்கள் ஏற்படுத்தும் தாக்கங்களை கட்டுப்படுத்தவும் சென்னை ஐகோர்ட்டின் ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் குழு அமைக்கப்படுவதாக அவர் கூறியிருந்தார்.
அவசர சட்டம் மேலும், இந்த குழு 2 வாரங்களுக்குள் தனது பரிந்துரைகளை அரசுக்கு அளிக்கும் என்றும் அவர் கூறியிருந்தார். இந்த குழுவில் ஐ.ஐ.டி. தொழில்நுட்ப வல்லுநர் டாக்டர் சங்கரராமன், ஸ்நேஹா அமைப்பின் நிறுவனரும், உளவியலாளருமான டாக்டர் லட்சுமி விஜயகுமார், கூடுதல் டி.ஜி.பி. வினித் தேவ் வான்கடே ஆகியோர் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
இந்நிலையில் இக்குழுவினர் ஆன்லைன் ரம்மி விளையாட்டு தொடர்பாக ஆராய்ந்து பரிந்துரைகளை இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்பிக்க உள்ளனர். தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று மாலை 5 மணி அளவில் நடைபெறுகிறது.இக்கூட்டத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு தடை விதிக்க சட்டம் இயற்றப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.