எனது சாவுக்கு ஆன்லைன் ரம்மிதான் காரணம் தண்டவாளத்தில் படுத்து என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை
எனது சாவுக்கு ஆன்லைன் ரம்மிதான் காரணம் என செல்போனில் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு என்ஜினீயரிங் மாணவர், தண்டவாளத்தில் படுத்து தற்கொலை செய்து கொண்டார்.
திருச்சி,
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் ரெயில் நிலையம் அருகே நாளங்காடிக்கு பின் பகுதியில் வாலிபர் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். இதை பார்த்த அப்பகுதி மக்கள் நேற்று காலை திருச்சி ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.
அங்கு இறந்து கிடந்த வாலிபரின் தலை மற்றும் ஒரு கை தனியாக துண்டிக்கப்பட்டும், உடல் தனியாகவும் கிடந்தது. இதையடுத்து அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர்.
பணத்தை இழந்தார்
இதில் அங்கு இறந்து கிடந்த வாலிபர், மணப்பாறையை அடுத்த அமயபுரம் அருகே உள்ள மலையாண்டிப்பட்டியைச் சேர்ந்த ரவிக்குமாரின் மகன் சந்தோஷ் (வயது 23) என்பது தெரியவந்தது. இவர் மணப்பாறை அருகே உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரி ஒன்றில் இறுதியாண்டு படித்து வந்தார்.
மேலும் இவர் கடந்த 6 மாதங்களாக ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்துள்ளார். ஒரு கட்டத்தில் வீட்டில் இருந்த நகைகளை எடுத்துச்சென்று, அதன் மூலம் கிடைத்த பணத்தை கொண்டும் ஆன்லைன் ரம்மி விளையாடியுள்ளார். இதில் அந்த பணத்தையும் அவர் இழந்ததால் மிகுந்த மனவேதனைக்கு ஆளான சந்தோஷ், ரெயில்வே தண்டவாளத்தில் படுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார், என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.இதற்கிடையே ஆன்லைன் ரம்மி விளையாட்டால் எங்களது குடும்பம் நாசமாகிவிட்டதே என்று மகனின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர்.
சந்தோஷ் வைத்திருந்த 'ஸ்டேட்டஸ்'
தற்கொலை செய்து கொண்ட என்ஜினீயரிங் மாணவர் சந்தோஷ் நேற்று முன்தினம் இரவு 9.50 மணிக்கு தனது செல்போனில் உள்ள வாட்ஸ்-அப்பில் ஒரு 'ஸ்டேட்டஸ்' வைத்துள்ளார். அதில், என்னுடைய மரணத்திற்கு முழு காரணம் ஆன்லைன் ரம்மிதான். அதில் நான் அடிமையாகி அதிக பணம் இழந்ததால் உயிரை மாய்த்துக்கொள்கிறேன், என்று குறிப்பிட்டிருந்தார். அதன்பின்னர் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அவரது 'ஸ்டேட்டசை' பார்த்தவர்கள் அவருக்கு என்ன நேர்ந்ததோ என்ற தவிப்புக்கு உள்ளாகினர். இறுதியில் நேற்று சந்தோசை பிணமாகவே பார்க்க முடிந்தது.
இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.