தமிழகத்தில் தான் விசைத்தறிகளுக்கு குறைந்த மின்கட்டணம்: அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி
இந்திய அளவில் தமிழகத்தில் தான் விசைத்தறிகளுக்கு குறைந்த மின் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.
கோவை,
தமிழகத்தில் 2.37 கோடி மின் நுகர்வோரில் ஒரு கோடி மின்நுகர்வோருக்கு கட்டண மாற்றம் இல்லை. 63.35 லட்சம் மின் நுகர்வோருக்கு 2 மாதங்களுக்கு 55 ரூபாய் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. ஏழை மக்கள் பாதிப்பில்லாத வகையில் மின் கட்டணம் உயர்வு கொண்டு வரப்பட்டு உள்ளது.
சிறு குறு, நடுத்தர தொழில் முனைவோருக்கு உயர்த்த திட்டமிடப்பட்ட கட்டணம் ரூ.3,217 கோடியை குறைத்து நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் விசைத்தறிகளுக்கு குறைந்த மின் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. மற்ற மாநிலங்களில் விசைத்தறிகளுக்கு எச்.டி. கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ள நிலையில் தமிழகத்தில் விசைத்தறிகளுக்கு அந்த கட்டணம் இல்லை.
கடந்த அ.தி.மு.க ஆட்சியில் விசைத்தறிகளுக்கு எவ்வளவு கட்டணம் உயர்த்தினார்கள். இப்போது எவ்வளவு உயர்த்தப்பட்டு உள்ளது என்று பார்க்க வேண்டும். 70 பைசா மட்டுமே கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
மின் கட்டணம்
தமிழகத்தின் மின் தேவையில் 25 சதவீதம் மட்டுமே மின்வாரியம் உற்பத்தி செய்கிறது. மற்றவற்றை வெளியில் இருந்து தான் வாங்குகிறோம். 2006-11 ஆட்சியில் திட்டமிடப்பட்ட திட்டங்களை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வரும் டிசம்பர் மாதம் 800 மெகா வாட் மின் உற்பத்தி திட்டம் செயல்பாட்டுக்கு வரும். 316 துணை மின் நிலையங்கள் டெண்டர் நிலைக்கு வந்துள்ளது.
தி.மு.க தேர்தல் வாக்குறுதியில் கடந்த ஆட்சியில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்து இருந்தோம். அது நிறைவேற்றபட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.