நீதித்துறை சுதந்திரமாக செயல்படும் போது தான் பொதுமக்கள் நம்பிக்கை வைப்பார்கள்ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் பேச்சு


நீதித்துறை சுதந்திரமாக செயல்படும் போது தான் பொதுமக்கள் நம்பிக்கை வைப்பார்கள்ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் பேச்சு
x
தினத்தந்தி 30 July 2023 12:15 AM IST (Updated: 30 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

நீதித்துறை சுதந்திரமாக செயல்படும் போது தான் பொதுமக்கள் அதன் மீது நம்பிக்கை வைப்பார்கள் என்று ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் பேசினார்.

கள்ளக்குறிச்சி


திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சப்-கோர்ட்டு திறப்பு விழா நேற்று நடைபெற்றது. அதைத்தொடர்ந்து திருக்கோவிலூர் ஆசனூர் சாலையில் உள்ள எம்.ஜே. திருமண மண்டபத்தில் நடைபெற்ற திறப்பு விழாவுக்கு சென்னை ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் தலைமை தாங்கி, நீதிமன்றத்திற்கான கல்வெட்டை திறந்து வைத்தார்.

முன்னதாக விழாவுக்கு வந்த அனைவரையும் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஆர்.பூர்ணிமா வரவேற்றார். சப்கோர்ட்டு நீதிபதி இளவரசி, மாவட்ட முதன்மை உாிமையியல் நீதிபதி பத்மாவதி, ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு வெங்கடேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தாமதமின்றி நீதி

விழாவில்,ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் பேசியதாவது:-

கோர்ட்டுக்கு வழக்கு சம்பந்தமாக வரும் ஒவ்வொரு மக்களுக்கும் தாமதமின்றி நீதி கிடைக்க வேண்டும். நீதி தாமதமாகும் போது வழக்கு தொடுத்தவருக்கு நமக்கு நீதி கிடைக்குமா? என்ற எண்ணம் ஏற்பட்டு விடும். இதை நிவர்த்தி செய்யும் வகையில் வக்கீலும் நீதிபதிகளும் பாடுபட வேண்டும்.

வக்கீல்கள் எங்களிடம் சட்ட நுணுக்கங்களை எடுத்துப் பேசி நீதி பெறும் வகையில் பாடுபட வேண்டும். நீதித்துறை சுதந்திரமாக செயல்படும் போது தான் பொதுமக்கள் அதன் மீது நம்பிக்கை வைப்பார்கள்.

அதேபோல் வக்கீல்கள் உங்களின் வழக்குதாரருக்கு நம்பிக்கையுடன் செயல்பட்டு நீதிமன்றத்தின் மூலம் நீதி கிடைக்கப் போராடுங்கள். அதேசமயம் நீதிமன்றத்தின் மாண்பும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதையும் உணருங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

வாய்தா வாங்காமல் முடிக்க வேண்டும்

அவரை தொடர்ந்து, சென்னை ஐகோர்ட்டு நீதிபதி என்.ஆனந்தவெங்கடேஷ் பேசியதாவது:-

கேட்டவுடன் கிடைத்து விட்டால் அது நிலைக்காது. போராட்டத்துக்குப் பின் கிடைத்தால் தான் என்றும் உங்களுடன் இருக்கும். இந்த நீதிமன்றத்தை திறந்து வைத்து நீதிபதி அமர்ந்து கோர்ட்டு செயல்பட தொடங்கிய போது, நான் ஒரு விஷயத்தை நேரில் பார்த்தேன்.

அதாவது, 2 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டு விசாரணை செய்யப்பட்டது. அப்போது வழக்கு தொடர்ந்தவர்கள், எதிர்மனுதாரர்கள் ஆஜரானார்கள். இது எங்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

கோர்ட்டில் வழக்குகள் இப்படித்தான் விரைவாக நடக்க வேண்டும் என்பது எங்களுக்கான ஆசையும் கூட. அது இன்று மட்டும் இல்லாமல் என்றும் இது போல் விரைவாக நடந்து, விரைந்து நீதி கிடைக்கின்ற வகையில் நீதிபதிகளும் வக்கீல்களும் பாடுபட வேண்டும். குறிப்பாக வக்கீல்கள் வாய்தாவாங்காமல் வழக்கை விரைந்து முடிக்க வேண்டும்.

தர்மத்தின் அடிப்படையில் செயல்

நீதிமன்றம் என்பது பொதுமக்களின் நலனுக்காக தான் என்பதை வக்கீல்களும் நீதிபதிகளும் மறந்து விடக்கூடாது. திருக்குறளை எழுதிய திருவள்ளுவர் எங்காவது ஒரு இடத்திலாவது தனது பெயரை அவர் பதிவு செய்திருக்கிறாரா என்று பார்த்தேன், ஆனால் இல்லை.

அவர் எந்த சாதி, எந்த மதம், எந்த ஊர், எந்த பகுதி எந்த ஒரு குறிப்பும் இதுவரை கிடைக்கவில்லை. ஆனால் ஓலைச்சுவடியில் எழுதிய 1330 குறளும் இன்றளவும் இருக்கிறது என்றால் அது தர்மத்தின் அடிப்படையில் எழுதப்பட்டது என்பதே உண்மையாகும்.

எனவே எந்த ஒரு விஷயத்திலும் நமக்கான அடையாளத்தை தேடுவதை விட்டுவிட்டு தர்மத்தின் அடிப்படையில் நமது செயல் இருக்க வேண்டும். வக்கீல்கள் வாய்தாக்கள் வாங்காமல் வழக்குகளை விரைந்து நடத்தி மனுதாரர்களுக்கு நீதி கிடைக்க பாடுபடுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து போராடிநீதியை பெறுங்கள்

இதையடுத்து சென்னை ஐகோர்ட்டு நீதிபதி எம்.தண்டபாணி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

வரலாற்றில் சிறப்பு வாய்ந்த திருக்கோவிலூருக்கு கோவிலூர் என்ற பெயரும் உண்டு. வழக்கறிஞர் தொழிலுக்கு மற்ற தொழிலை காட்டிலும் ஒரு கூடுதல் சிறப்பு உண்டு. அது என்னவென்றால் அநீதியை தட்டி கேட்க முடியும். உரிமையை கேட்டுப் பெற முடியும். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

அதனால் மற்ற துறையை நான் குறைத்து மதிப்பிடவில்லை. இவ்வளவு சிறப்பு மிக்க இந்த தொழிலில் ஈடுபடும் வக்கீல்கள் வழக்காளிகளுக்கு நியாயம் கிடைக்க நேர்மையாகவும் உண்மையாகவும் செயல்பட்டு வழக்கை தாமதப்படுத்தாமல் தொடர்ந்து போராடி நீதியை பெறுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

பாராட்டு சான்றிதழ்

விழாவில் கலெக்டர்கள் (விழுப்புரம்) பழனி, (கள்ளக்குறிச்சி) ஷ்ரவன்குமார், கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ், திருக்கோவிலூர் வக்கீல் சங்க துணை தலைவர் (பொறுப்பு) ராஜ்குமார், வக்கீல் சங்க செயலாளர் சுவிஜி சரவண்ணகுமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

முன்னதாக மூத்த வழக்கறிஞர்கள் 80 பேருக்கு ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் பாராட்டு சான்றிதழும், நினைவுப்பரிசும் வழங்கினார்.

விழாவில் விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நீதிபதிகள், மாஜிஸ்திரேட்டுகள், திருக்கோவிலூர் வக்கீல்கள் ஆதிசங்கர், ரங்கநாதன், தங்கம், ராமதாஸ், துரைபாண்டியன், செல்வராஜ், இளங்கோவன், ஏசுதாசன், ரஜினிகாந்த், தமிழ்ச்செல்வன், திருச்செல்வன், அன்பு, லட்சுமிகுமார், ராமதாஸ், ஆனந்தன், செந்தில்குமார், ரங்கநாதன், உமாசங்கர், ராஜேஷ், சங்கர், சிவக்குமார், விஜய், ராஜபாண்டியன் மற்றும் சங்க பொருளாளர் சுப்பிரமணி உள்ளிட்ட வக்கீல்கள் பலரும் கலந்து கொண்டனர்.

முடிவில் விழுப்புரம் மாவட்ட முதன்மை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு எம்.புஷ்பராணி நன்றி கூறினார்.


Next Story