ஓணம் பண்டிகை விமரிசையாக கொண்டாட்டம்
அறுவடை திருநாள் என்று அழைக்கக்கூடிய ஓணம் பண்டிகை உடுமலை பகுதியில் உள்ள கேரள மக்களால் நேற்று விமரிசையாக கொண்டாடப்பட்டது.
அறுவடை திருநாள் என்று அழைக்கக்கூடிய ஓணம் பண்டிகை உடுமலை பகுதியில் உள்ள கேரள மக்களால் நேற்று விமரிசையாக கொண்டாடப்பட்டது.
ஓணம் பண்டிகை
கொல்ல வருஷம் என்ற மலையாள ஆண்டின் முதல் மாதமான சிங்கம் மாதத்தில் அஸ்தம் நட்சத்திரத்தில் தொடங்கி திருவோணம் நட்சத்திரம் வரை உள்ள 10 நாட்களே ஓணம் பண்டிகை ஆகும். அதன்படி அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம் உள்ளிட்ட பத்து நட்சத்திர நாட்களிலும் மலையாள மக்கள் வீட்டு வாசலில் பூக்கோலம் இட்டும், களரி, படகுப்போட்டி, கயிறு இழுத்தல், பாரம்பரிய நடனப் போட்டிகளில் ஜாதி மத வேறுபாடின்றி ஒற்றுமையுடன் கலந்து கொண்டு விழா எடுத்து வருகின்றனர்.
விழாவின் முக்கிய நிகழ்வான 10-ம் நாளில் திருவோண தினத்தன்று பாதாள உலகத்தில் இருந்து பூவுலகத்திற்கு வருகை தரும் அரசர் மகாபலி சக்கரவர்த்தியை வீட்டின் வாசலில் அத்தப்பூ பூக்கோலமிட்டு வரவேற்கின்றனர். பின்னர் அறுசுவையில் கசப்பை தவிர்த்து தயாரிக்கப்படும் ஓண சாத்யா என்று அழைக்கக்கூடிய 64 வகையான உணவுகளை வாழை இலையில் படையலிட்டு வழிபடுகின்றனர். இந்த நிகழ்வானது ஆண்டுதோறும் மலையாள மக்களால் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
கொண்டாடி மகிழ்ந்தனர்
அந்த வகையில் நேற்று உடுமலை பகுதியில் உள்ள மலையாள மக்கள் ஓணம் பண்டிகை விழாவை உற்சாகமாக கொண்டாடினார்கள். வீடுகளில் தோரணங்கள் கட்டியும் கசவு என்று அழைக்கக்கூடிய பாரம்பரிய வெண்ணிற புத்தாடையை பெண்கள் அணிந்தும் தும்பை, காசி, அரிப்பூ, சங்குப்பூ உள்ளிட்ட பூக்கள் அடங்கிய அத்தப்பூ பூக்கோலமிட்டு அலங்கரித்தனர்.
பின்னர் ஐதீக முறைப்படி வீட்டு வாசலில் மகாபலி சக்கரவர்த்தி, ராணி, மந்திரி சிப்பாய்களுடன் கூடிய சிலைகளை வைத்து மலர்கள் சூடி உபசரித்து அரசர் மகாபலியை வீட்டுக்குள் வரவேற்று அழைத்துச்சென்று வழிபட்டனர். அதைத்தொடர்ந்து உறவினர்களுக்கு இனிப்பு வழங்கியும் விருந்து படைத்தும் விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்.
ஓணம் ஸ்பெஷல்
புது அரிசி மாவில் தயார் செய்யப்பட்ட அடை, அவியல், அடை பிரதமன், பால் பாயாசம், அரிசிசாதம், பருப்பு, நெய், சாம்பார், காலன், ஓலன், ரசம், மோர், தோரன், சர்க்கரப் புரட்டி, கூட்டு, கிச்சடி, பச்சடி, இஞ்சிப்புளி, எரிசேரி, மிளகாய்அவியல், பரங்கிக்காய் குழம்பு, பப்படம், காயவறுத்தது, சீடை, ஊறுகாய் உள்ளிட்ட 64 வகையான உணவு அடங்கியதே ஓண சாத்யா ஆகும்.