ஊட்டி படகு இல்ல ஏரி ரூ.10 கோடியில் தூர்வாரப்படும்-அதிகாரி தகவல்


ஊட்டி படகு இல்ல ஏரி ரூ.10 கோடியில் தூர்வாரப்படும்-அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 26 Aug 2023 8:23 PM IST (Updated: 26 Aug 2023 6:45 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டி படகு இல்ல ஏரியை ரூ.10 கோடி செலவில் தூர்வார திட்டமிடப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நீலகிரி

ஊட்டி

ஊட்டி படகு இல்ல ஏரியை ரூ.10 கோடி செலவில் தூர்வார திட்டமிடப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஊட்டி படகு இல்ல ஏரி

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் முக்கிய சுற்றுலா தலமாக ஊட்டி படகு இல்லம் திகழ்கிறது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மூலம் ஊட்டி ஏரியில் படகு இல்லம் செயல்பட்டு வருகிறது.

இந்த ஏரி 1823-ல் செயற்கையாக உருவாக்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் சேரிங்கிராஸ் முதல் காந்தல் முக்கோணம் வரை ஏரியின் பரப்பளவு இருந்தது. அப்போது ஏரியின் தண்ணீர் குடிநீராக பயன்படுத்தப்பட்டது. பின்னர் காலப்போக்கில் ஊட்டி நகரில் கட்டப்படும் கட்டிடங்கள் எண்ணிக்கை அதிகரித்ததால், வணிக வளாகங்கள், ஓட்டல்கள், வீடுகள், தங்கும் விடுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கோடப்பமந்து கால்வாய் வழியாக ஊட்டி ஏரியில் கலக்கிறது. மேலும் விவசாய நிலங்களில் இருந்து அடித்து வந்த மண்ணும் படிகிறது. இதற்கிடையே கடந்த 20 வருடங்களுக்கு முன்பு ஒரு முறை மாவட்ட நிர்வாகம் மூலம் ஏரி தூர்வாரப்பட்டது. ஆனாலும் அப்போது கரை பகுதி மட்டுமே தூர்வாரியதாக தெரிகிறது. மேலும் கடந்த 2018-ம் ஆண்டு ஏரியை தூர்வாரும் பணி நடந்தது. இதில் கோடப்பமந்து கால்வாய் ஊட்டி ஏரியில் கலக்கும் முகத்துவாரத்தில் 2 அடி ஆழத்திற்கு படிந்திருந்த மண் மட்டுமே அகற்றப்பட்டது.

16 லட்சம் பேர்

ஊட்டி படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகளுக்காக 33 மோட்டார் படகுகள், 17 துடுப்பு படகுகள், 105 மிதி படகுகள் இயக்கப்பட்டு வருகிறது. படகு இல்லத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை படகு சவாரி செய்யலாம். ஏரியின் மறு கரையில் உள்ள தேனிலவு படகு இல்லத்திலும், சிறுவர் பூங்கா உட்பட வசதிகள் உள்ளன. கடந்த ஆண்டு ஊட்டி படகு இல்லத்துக்கு 16 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து உள்ளனர்.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஊட்டி ஏரி கடந்த பல ஆண்டுகளாக முழுமையாக தூர்வரப்படாததால் சேறும் சகதியுமாக உள்ளது. இதனால் ஊட்டி ஏரியில் துர்நாற்றம் வீசுகிறது. சில நேரங்களில் சுற்றுலாப் பயணிகளின் படகுகள் சகதியில் மாட்டிக் கொள்கிறது. எனவே சுற்றுலா பயணிகளின் வசதிக்காகவும் கோடப்பமந்து கால்வாயில் இருந்து கொண்டுவரும் தண்ணீரை அதிக அளவில் சேமிக்கவும் வலியுறுத்தி ஊட்டி படகு இல்ல ஏரியை தூர்வார வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் தற்போது ஊட்டி படகு இல்ல ஏரியை முழுவதுமாக தூர்வார பொதுப்பணித்துறை, நீர்வளத் துறை அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். இதுகுறித்து பொதுப்பணித்துறை நீர்வள ஆதார உதவி செயற்பொறியாளர் சதீஷ்குமார் கூறியதாவது:-

ரூ.10 கோடி

ஊட்டி படகு இல்ல ஏரி, கோடப்பமந்து கால்வாய் முழுவதுமாக தூர்வாரப்பட உள்ளது. கோடப்பமந்து கால்வாயில் 3½ கிலோ மீட்டர் தூரம் மணல் மற்றும் செடிகள் அகற்றப்படுகிறது. இதேபோல் 10 லட்சம் மீட்டர் கியூபிக் கொள்ளளவு கொண்ட ஊட்டி ஏரியில் 2.98 லட்சம் மீட்டர் கியூப் அளவுக்கு சகதி எடுக்கப்படுகிறது.

மேலும் கோடப்பமந்து கால்வாயில் இருந்து ஏரியில் இணையும் இடத்தில் சேரும் கழிவுகள் தானியங்கி முறையில் அகற்ற எந்திரங்கள் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட நிர்வாக நிதியாக ரூ.10 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டு உள்ளது. நிர்வாக அனுமதி விரைவில் கிடைத்தவுடன் பணிகள் தொடங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story