ஊட்டி கென்ட்ஸ் அணி சாம்பியன்
மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் ஊட்டி கென்ட்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
கோத்தகிரி
நீலகிரி மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், மாவட்ட அளவிலான ஏ, பி மற்றும் சி டிவிஷன் கிரிக்கெட் போட்டிகள் கோத்தகிரி காந்தி மைதானத்தில் நடைபெற்று வந்தது. ஒவ்வொரு பிரிவிலும் தலா 10 அணிகள் பங்கேற்று விளையாடின. ஏ டிவிஷன் லீக் சுற்று போட்டிகளில் வெற்றி பெற்று அதிக புள்ளிகளை எடுத்த ஊட்டி கென்ட்ஸ் மற்றும் பிளாசம்ஸ் அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன. கோத்தகிரி காந்தி மைதானத்தில் இறுதி போட்டி நடைபெற்றது. தலா 35 ஓவர்களை கொண்ட போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஊட்டி பிளாசம்ஸ் அணி 25 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 149 ரன்கள் எடுத்தது. இந்த அணி வீரர்கள் அருண் 45 ரன்கள், பிரகாஷ் 32 ரன்கள் எடுத்தனர். கென்ட்ஸ் அணியின் பந்து வீச்சாளர் நந்தன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடர்ந்து 210 பந்துகளில் 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் விளையாடிய கென்ட்ஸ் அணி 26.2 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இந்த அணியின் வீரர்கள் மணி 48 ரன்கள், விஸ்வநாதன் 44 ரன்கள், அருள் 30 ரன்கள் எடுத்தனர். பிளாசம்ஸ் அணியின் பந்து வீச்சாளர்கள் அசரப், முகிழ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன் மூலம் கென்ட்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை வென்றது.