திறந்தவெளி மைதானங்கள், மதுபான பாராக மாறுகிறது


திறந்தவெளி மைதானங்கள், மதுபான பாராக மாறுகிறது
x

திறந்தவெளி மைதானங்கள், மதுபான பாராக மாறுகிறது

தஞ்சாவூர்

தஞ்சையில் எங்கு பார்த்தாலும் காலி மதுபாட்டில்கள் கிடக்கிறது. மேலும் திறந்தவெளி மைதானங்கள், மேம்பாலம் பகுதிகளில் திறந்தவெளி மதுபான பாராக மாறி வருகிறது. இதனால் அந்த பகுதி வழியாக செல்லும் மக்கள் முகம் சுளித்த வண்ணம் செல்கிறார்கள்.

போதைப்பழக்கம்

தமிழகத்தில் இளைஞர்களிடையே போதைப்பழக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கஞ்சா, குட்கா, தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள், மது போன்றவற்றுக்கு அடிமையாகி விடுகிறார்கள்.

அதிலும் குறிப்பாக இளைஞர்கள் மது போதைக்கு அடிமையாகி வருகிறார்கள். தஞ்சை மாவட்டத்தில் மட்டும் 160-க்கும் மேற்பட்ட மதுபானக்கடைகள் இயங்கி வருகின்றன. இந்த கடைகளில் குறிப்பிட்ட கடைகளில் மதுபான பாரும் செயல்பட்டு வருகிறது.

மதுபான பாராக மாறும் நிலை

மதுபானக்கடைகள் பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படுகிறது. ஆனால் பல இடங்களில் மதுபானங்கள் திருட்டுத்தனமாக எந்தநேரமும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் தினமும் சராசரியாக ரூ.4 முதல் ரூ.5 கோடி வரை விற்பனையாகிறது. கடந்த தீபாவளி பண்டிகையின் போது 2 நாளில் மட்டும் ரூ.19 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது.

முன்பெல்லாம் வேலைக்கு செல்பவர்கள் வேலை முடிந்து இரவு நேரங்களில் மது அருந்துவது வழக்கம். ஆனால் தற்போது 24 மணி நேரமும் மது அருந்துவதை பார்க்க முடிகிறது. மதுபிரியர்கள் மதுவினை வாங்கி மதுபான பார்களில் வைத்து மது அருந்தி விட்டு, யாருக்கும் தெரியாமல் வீடுகளுக்குசெல்ல வேண்டும் என்று செல்வார்கள். ஆனால் தற்போது மது வாங்கிக்கொண்டு எல்லா இடங்களில் நின்று மது அருந்துவதை காணமுடிகிறது.

காலி பாட்டில்கள்

தஞ்சை மாநகரில் பல்வேறு இடங்களில் எங்கு பார்த்தாலும் காலி மதுபாட்டில்களாகவே காட்சி அளிக்கிறது. திறந்தவெளி மைதானங்கள் குறிப்பாக தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை, சுற்றுலா மாளிகை பின்பகுதியில் உள்ள பழைய கோர்ட்டு வளாகம், திலகர் திடல், தொம்பன்குடிசை மேம்பாலம் அடிப்பகுதி, சாந்தப்பிள்ளை கேட் மேம்பாலம்அடிப்பகுதி, புதிய பஸ் நிலைய வளாகம், பல்வேறு பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள், கல்லணைக்கால்வாய் நடைபாதை, சாலையோரம் என எங்கு பார்த்தாலும் மதுபான பார் போல, குடிமகன்கள் நின்று கொண்டு மது அருந்துவதை காண முடிகிறது. எங்கெங்கு காலி இடங்கள் கிடக்கிறதோ? அங்கெல்லாம் நின்று கொண்டு மது அருந்துவதை காண முடிகிறது. அதுவும் 24 மணி நேரமும் மது அருந்துகிறார்கள்.

சாலையில் பெண்கள், ஆட்கள் நடமாட்டம் இருந்தாலும் அதை கண்டுகொள்ளாமல் மதுபிரியர்கள் மது அருந்துகிறார்கள். இதனால் சாலையில் செல்பவர்கள் முகம் சுளித்தவாறு செல்வதை காண முடிகிறது. நில நேரங்களில் மது அருந்தி விட்டு தகராறில் ஈடுபடுவது, சாலையோரங்களில் அரைகுறை ஆடைகளுடன் படுத்துக்கிடப்பது போன்றவற்றாலும் அந்த வழியாக செல்பவர்கள் மன சங்கடங்களுக்கு ஆளாகிறார்கள்.

தடை விதிக்க வேண்டும்

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், "தற்போது மது அருந்துவது சர்வசாதாரணமாகி விட்டது. பொதுஇடங்களில் குடித்து விட்டு மதுபாட்டில்களை அப்படியே போட்டு விட்டு செல்கிறார்கள். இதனால் பொது இடங்களுக்கு மக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சில நேரங்களில் பாட்டில்களை உடைத்தும் போட்டு விடுகிறார்கள். இதனால்அந்த வழியாக நடந்து செல்பவர்களின் காலில் குத்தி காயம் ஏற்படுகிறது. எனவே காலி பாட்டில்களை திருப்பிக்கொடுத்தால் பணம் கொடுக்கப்படும் என அறிவிக்க வேண்டும். மேலும் மதுபான பார்களை தவிர திறந்த வெளியில் மது அருந்துவதற்கு தடை விதிப்பதோடு, அவ்வாறு மது அருந்துபவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்"என்றனர்.


Next Story