திறந்து கிடக்கும் கால்வாய்கள்: மக்களின் உயிரோடு விளையாடும் இந்த செயல் கண்டனத்திற்குரியது - டிடிவி தினகரன்
திறந்து கிடக்கும் கால்வாய்கள் மக்களைக் காவு வாங்கும் அளவிற்குச் சென்றிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
சென்னை,
சென்னையின் பல இடங்களில் போதிய முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் இல்லாமல் மழை நீர் வடிகாலுக்காக தோண்டப்படும் கால்வாய் பணிகள் மக்களைக் காவு வாங்கும் அளவிற்குச் சென்றிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "சென்னை மாநகரின் பல இடங்களில் போதிய முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் இல்லாமல் மழை நீர் வடிகாலுக்காக தோண்டப்படும் கால்வாய் பணிகள் மக்களைக் காவு வாங்கும் அளவிற்குச் சென்றிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
கே.கே நகரில் நேற்று மரம் விழுந்து வங்கி பெண் மேலாளர் திருமதி.வாணி பலியானதற்கு கால்வாய் தோண்டப்படும் பணிகளில் காட்டப்பட்ட அலட்சியமே காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
இதற்கேற்றார்போல் பல பகுதிகளில் கால்வாய் தோண்டப்படும் இடங்கள் எவ்வித தடுப்புமின்றி திறந்தே கிடப்பதை பார்க்கமுடிகின்றது. மக்களின் உயிரோடு விளையாடும் இந்த செயல் கண்டனத்திற்குரியது. இதன்பிறகாவது உரிய முன்னெச்சரிக்கையோடும், பாதுகாப்போடும் இப்பணிகள் மேற்கொள்ளப்படவேண்டும். உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு தமிழக அரசு இழப்பீடு வழங்கவேண்டும் என வலியுறுத்துகிறேன்" என்று கூறியுள்ளார்.