பொள்ளாச்சி மாட்டு சந்தையில் திறந்து கிடக்கும் கழிவுநீர் தொட்டி
பொள்ளாச்சி மாட்டு சந்தையில் திறந்துகிடக்கும் கழிவுநீர் தொட்டியினால் உயிர்ச்சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வியாபாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி மாட்டு சந்தையில் திறந்துகிடக்கும் கழிவுநீர் தொட்டியினால் உயிர்ச்சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வியாபாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.
கழிவுநீர் தொட்டி
பொள்ளாச்சி காந்தி மார்க்கெட் அருகில் மாட்டு சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் சந்தை நடைபெற்று வருகிறது. மேலும் சந்தைக்கு கோவை மாவட்டம் மட்டுமல்லாது வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வியாபாரிகள் மாடுகளை கொண்டு வருகின்றனர். மேலும் இங்கிருந்தும் மாடுகளை வாங்கி செல்கின்றனர்.
இதற்கிடையில் சந்தையில் உள்ள கழிப்பிடத்தின் அருகில் கழிவுநீர் தொட்டி உள்ளது. இந்த தொட்டி மீது போடப்பட்ட மூடி உடைந்து, பாதி மட்டும் உள்ளது. அந்த பகுதியில் மாடுகள் கட்டி வைக்கப்பட்டு இருப்பதால் தொட்டி இருப்பதே தெரிவதில்லை. இதற்கிடையில் யாராவது தவறி கழிவுநீர் தொட்டிக்குள் விழுவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே அந்த தொட்டியை சரியாக மூடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து மாட்டு வியாபாரிகள் கூறியதாவது:-
நடவடிக்கை எடுக்கப்படுமா?
சந்தைக்கு செவ்வாய்க் கிழமைகளில் சுமார் 200 முதல் 300 வியாபாரிகள் வரை வருகின்றனர். இதை தவிர சராசரியாக 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுகள் கொண்டு வரப்படுகின்றன. சந்தையில் வியாபாரிகளுக்கு கழிப்பிடம் கட்டி கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த கழிப்பிடத்தின் அருகில் உள்ள கழிவுநீர் தொட்டி திறந்து கிடக்கிறது. மாடுகள் கட்டி வைத்திருப்பது, வைக்கோல்கள் சிதறி கிடப்பதால் தொட்டி இருப்பது எளிதில் தெரியாது.
இதனால் கால் தவறி தொட்டிக்குள் விழுவதற்கு வாய்ப்பு உள்ளது. இதனால் ஏதாவது அசம்பாவித சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது. மேலும் இரவு நேரங்களில் சிலர் அந்த பகுதியில் தான் மது அருந்துகின்றனர். எனவே கழிவுநீர் தொட்டிக்குள் யாராவது விழுந்து ஏதாவது உயிர்ச்சேதம் ஏற்படும் முன் அந்த தொட்டியை மூடுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.