6 ஆண்டுகளாக பூட்டி இருந்த 13 கோவில்கள் திறப்பு
நாமக்கல் அருகே 3 வெவ்வேறு சமுதாயத்தினர் இடையே நிலவிய கருத்து வேறுபாட்டிற்கு பேச்சுவார்த்தையில் சுமூகத்தீர்வு ஏற்பட்டதை தொடர்ந்து 6 ஆண்டுகளுக்கு மேலாக பூட்டப்பட்டிருந்த 13 கோவில்கள் திறக்கப்பட்டன.
6 ஆண்டுகளுக்கு மேல்
நாமக்கல் அருகே உள்ள தும்மங்குறிச்சி, மேலப்பட்டி மேல்முகம் கிராமத்தில் இருவேறு சமுதாயத்தினருக்கு பாத்தியப்பட்ட கூத்தாண்டம்மன், கொங்களாயி அம்மன் உள்பட 4 கோவில்கள் உள்ளன. மேலும் அதே பகுதியில் மற்றொரு சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட 2 காமாட்சி அம்மன், 2 நல்லேந்திரன் கோவில்கள், வீரமாத்தி அம்மன் கோவில் உள்பட 9 கோவில்கள் உள்ளன.
இதனிடையே 3 வெவ்வேறு சமுதாயத்தினருக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த 13 கோவில்களும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு வருவாய்த்துறை அதிகாரிகளால் சீல் வைத்து பூட்டப்பட்டது. அதனால் கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக அந்த கோவில்கள் அனைத்தும் மூடிக்கிடந்தன. பொதுமக்களும் வழிபாடு நடத்த முடியாத நிலை இருந்து வந்தது.
13 கோவில்கள் திறப்பு
இது தொடர்பாக பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டன. இதனிடையே நேற்று முன்தினம் நாமக்கல் தாசில்தார் அலுவலகத்தில், தாசில்தார் சக்திவேல் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. அதில் சுமூகத்தீர்வு ஏற்பட்டதை தொடர்ந்து தாசில்தார் சக்திவேல் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் சீல்கள் அகற்றப்பட்டு 13 கோவில்களும் திறக்கப்பட்டன.
இதையடுத்து அந்த கோவில்களின் வளாகங்களை சம்பந்தப்பட்ட சமுதாயத்தினர் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். மேலும் சாமி சிலைகளும் தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்யப்பட்டதோடு, சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டது.
முன்னதாக கோவில்கள் திறக்கப்பட்டதையொட்டி பொதுமக்கள் பட்டாசு வெடித்து தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அப்போது அங்குள்ள வீடு ஒன்றில் தீப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அதை கண்ட போலீசார், தீயணைப்புத் துறையினர் மற்றும் அப்பகுதி மக்கள் உதவியுடன் தீயை அணைத்தனர்.