கொளத்தூர், அண்ணாநகர் தொகுதிகளில் 18 மாண்டிசோரி முறை வகுப்பறைகள் திறப்பு


கொளத்தூர், அண்ணாநகர் தொகுதிகளில் 18 மாண்டிசோரி முறை வகுப்பறைகள் திறப்பு
x

கொளத்தூர் மற்றும் அண்ணாநகர் தொகுதிகளில் உள்ள மாநகராட்சி பள்ளிகளில் 18 மாண்டிசோரி முறை வகுப்பறைகளை இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு திறந்து வைத்தார்.

சென்னை

சென்னை மாநகராட்சி மற்றும் விடியல் மாண்டிசோரி கல்வி அறக்கட்டளை சார்பில் கோபாலபுரம், மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், கொளத்தூர் மற்றும் அண்ணாநகர் மண்டலங்களில் 18 மாண்டிசோரி முறை வகுப்பறைகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு திறந்து வைத்தார். அப்போது, மாண்டிசோரி முறை வகுப்பறைகளுக்கான உபகரணங்களை வழங்கினார். மேலும், மாண்டிசோரி முறைகளில் பயிற்சி பெற்ற 37 மழலையர் ஆசிரியர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

இதைத்தொடர்ந்து, அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் கல்விக்காக அதிக முக்கியத்துவம் அளித்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு சிறப்பான கல்வியினை வழங்கிட வேண்டும். குழந்தைகளுக்கென்று பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட இந்த மாண்டிசோரி கல்வி முறையின் மூலம் குழந்தைகள் கற்றல் திறன் மேம்பாடு அடைகிறது. 2 வயது முதல் 6 வயதுக்குள் ஒரு குழந்தைக்கு இந்தக் கல்வி முறையை கற்பிக்கும்போது அந்த குழந்தைக்கு கல்வி என்பது மிகவும் எளிதான ஒரு விஷயமாகிவிடுகிறது.

கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட கோபாலபுரம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் 3 வகுப்பறைகளும், மடுமா நகர் நடுநிலைப்பள்ளியில் 2 வகுப்பறைகளும், செம்பியம், டி.வி.கே.நகர், கே.சி.கார்டன் ஆகிய பள்ளிகளில் தலா ஒரு வகுப்பறையும் தொடங்கிவைக்கப்பட்டு உள்ளது. இதேபோல, அண்ணாநகர் தொகுதிக்குட்பட்ட எம்.எம்.டி.ஏ. சென்னை நடுநிலைப்பள்ளி மற்றும் மஞ்சக்கொல்லை மாநகராட்சி ஆரம்பப் பள்ளியில் தலா 3 வகுப்பறைகள் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது. மாண்டிசோரி முறை மூலம் குழந்தைகள் தங்களுடைய கவனத்தை ஒருமுகப்படுத்தி அந்த உபகரணங்களுடன் ஒருமுறை அல்ல, பலமுறை மீண்டும் மீண்டும் பயிற்சி செய்து தனக்கு தானே கற்றல் திறனை வளர்த்துக்கொள்கிறார்கள். இதன்மூலம், குழந்தைகள் தங்களை உடல் ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும், அறிவு ரீதியாகவும் மேம்படுத்திக்கொள்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில், மேயர் பிரியா, எம்.கே.மோகன் எம்.எல்.ஏ., மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், துணை கமிஷனர் (கல்வி) சரண்யா அறி, மாமன்ற ஆளுங்கட்சித் தலைவர் ராமலிங்கம், விடியல் மாண்டிசோரி அறக்கட்டளை செயலாளர் சுருதி கார்த்திக் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


Next Story