ரூ.1 கோடியில் புதிய அறுவை சிகிச்சை கூடம் திறப்பு
பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.1 கோடியில் புதிய அறுவை சிகிச்சை கூடம் திறக்கப்பட்டது.
பேட்டை:
பேட்டை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் தினமும் சுமார் 250 நபர்கள் புற நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகிறார்கள். உள் நோயாளிகளாக மாதம் ஒன்றிற்கு சுமார் 60 நபர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் அரசின் உத்தரவிற்கேற்ப பாலி கிளினிக்கும் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் செயல்பட்டு வருகிறது.
இந்தநிலையில் நெல்லை மாநகராட்சி பொது சுகாதார பிரிவு சார்பில் அங்கு ரூ.1 கோடியே 3 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக நவீன கருவிகளுடன் அமைக்கப்பட்ட அறுவை சிகிச்சை கூடத்தை மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ ஆகியோர் திறந்து வைத்தனர்.
பின்னர் நவீன கருவிகளின் செயல்பாடுகள் மற்றும் அறுவை சிகிச்சைக்கு பின்னர் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மேயர் கேட்டறிந்தார். அதனை தொடர்ந்து கர்ப்பிணி பெண்களுக்கு மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் மருந்து பெட்டகத்தை வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் நெல்லை மண்டல தலைவர் மகேஸ்வரி, உதவி ஆணையாளர் வெங்கட்ராமன், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு பணிகள் துணை இயக்குனர் ராஜேந்திரன், மாநகர் நல அலுவலர் சரோஜா, சுகாதார அலுவலர் இளங்கோ, சுகாதார ஆய்வாளர் பாலசுப்பிரமணியன், மருத்துவ அலுவலர் ராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.