பொதுமக்கள் பங்களிப்புடன் புதிய ரேஷன் கடை திறப்பு


பொதுமக்கள் பங்களிப்புடன் புதிய ரேஷன் கடை திறப்பு
x
தினத்தந்தி 12 April 2023 12:15 AM IST (Updated: 12 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் கிராமத்தில் பொதுமக்கள் பங்களிப்புடன் புதிய ரேஷன் கடை திறப்பு

கள்ளக்குறிச்சி

தியாகதுருகம்

தியாகதுருகம் அருகே புது உச்சிமேடு ஊராட்சிக்குட்பட்ட ராமநாதபுரம் பகுதியில் சுமார் 150 குடும்ப அட்டைதாரர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று புது உச்சிமேடு ரேஷன் கடையில் அத்தியாவசிய பொருட்களை வாங்கி வந்தனர்.

இந்தநிலையி்ல் அப்பகுதி மக்கள் ராமநாதபுரம் பகுதியில் புதிய பகுதிநேர ரேஷன் கடை கட்ட வேண்டும் என ஊராட்சி மன்ற தலைவரிடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து ஊராட்சி மன்ற தலைவர், துணைத் தலைவர் மற்றும் பொது மக்கள் ஆகியோரின் நிதி பங்களிப்புடன் பகுதி நேர ரேஷன் கடை கட்டும் பணி தொடங்கி கடந்த சில நாட்களுக்கு முன்பு நிறைவடைந்தது. இதையொட்டி புதிய ரேஷன் கடை திறப்பு விழா நடைபெற்றது. இதற்கு ஒன்றியக்குழு தலைவர் தாமோதரன் தலைமை தாங்கி பகுதி நேர ரேஷன் கடையை திறந்து வைத்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்களை வழங்கினார். ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை, நெடுஞ்செழியன், தலைமை செயற்குழு உறுப்பினர் எத்திராஜ், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர் ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ் வரவேற்றார். இதில் ஒன்றிய அவைத்தலைவர்கள் சாமிதுரை, நூர்முகமது, துணை செயலாளர் ராமலிங்கம், பொருளாளர் கணேசன், மாவட்ட பிரதிநிதி மடம் பெருமாள், ஊராட்சி மன்ற தலைவர்கள் சுப்பு இளங்கோவன், சுகன்யா நாராயணசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர். முடிவில் துணைத் தலைவர் மணிகண்டன் நன்றி கூறினார்.


Next Story