கோடை விடுமுறைக்கு பிறகு 1248 மழலையர் தொடக்கப்பள்ளிகள் திறப்பு; மாணவ-மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு


கோடை விடுமுறைக்கு பிறகு 1248 மழலையர் தொடக்கப்பள்ளிகள் திறப்பு; மாணவ-மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு
x
தினத்தந்தி 14 Jun 2023 7:30 PM GMT (Updated: 15 Jun 2023 4:28 AM GMT)
தர்மபுரி

தர்மபுரி:

கோடை விடுமுறைக்கு பின் தர்மபுரி மாவட்டத்தில் 1,248 மழலையர் தொடக்கப்பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. பள்ளிகளுக்கு வந்த மாணவ, மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பள்ளிகள் திறப்பு

தமிழகம் முழுவதும் கோடை விடுமுறைக்கு பின்னர் ஜூன் 1-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வி துறை சார்பில் முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கோடை வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து பொதுமக்கள் வெளியே நடமாட முடியாத நிலை உருவானது. இதைத்தொடர்ந்து 2 முறை பள்ளிகள் திறக்கப்படும் தேதி தள்ளி வைக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து 6-ம் வகுப்பு முதல் 12 -ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு ஜூன் மாதம் 12-ந் தேதியும், ஒன்றாம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு ஜூன் 14-ந் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.

இந்த நிலையில் அரசு அறிவித்தபடி கோடை விடுமுறைக்கு பின் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு கடந்த திங்கட்கிழமை பள்ளிகள் திறக்கப்பட்டன.

1,248 பள்ளிகள் திறப்பு

இந்த நிலையில் அரசு அறிவித்தபடி நேற்று தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 1,165 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளும், 83 தனியார் மழலையர் தொடக்கப்பள்ளிகளும் என மொத்தம் 1,248 மழலையர் தொடக்கப்பள்ளிகள் திறக்கப்பட்டன. காலை 8 மணி முதல் அந்தந்த பள்ளிகளுக்கு மாணவ- மாணவிகள் வழக்கமான உற்சாகத்துடன் வந்தனர். அவர்களை பள்ளி மேலாண்மை குழு தலைவர்கள், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரிய- ஆசிரியைகள் இனிப்பு மற்றும் பூக்கள் கொடுத்து உற்சாகமாக வரவேற்றனர்.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மாணவர் சேர்க்கை ஊர்வலம் நடைபெற்றது. தொடர்ந்து அந்தந்த பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விறுவிறுப்பாக நடைபெற்றது. சுமார் 1½ மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டதால் வகுப்பறைகளுக்கு வந்த மாணவ- மாணவிகள் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர்.

தர்மபுரி ஒன்றியம் கடகத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் நற்சுவை சுகுமார் தலைமையில் பள்ளிக்கு வந்த மாணவிகளுக்கு மாலை அணிவித்து மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ஐவண்ணன், தலைமை ஆசிரியை விஜயலட்சுமி. உதவி தலைமை ஆசிரியர் பத்மினி, உதவி ஆசிரியர்கள் உமாராணி, ரமாதேவி, தங்கசெல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து மாணவர் சேர்க்கை நடைபெற்றது.


Next Story