1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு


1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு
x

புதுக்கோட்டை மாவட்டத்தில் கோடை விடுமுறை முடிந்து 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டதில் மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் வந்தனர்.

புதுக்கோட்டை

பள்ளிகள் திறப்பு

தமிழகத்தில் பொதுத்தேர்வுகள், ஆண்டு தேர்வுகள் முடிவடைந்த பின் கடந்த மே மாதம் கோடை கால விடுமுறை விடப்பட்டது. கடும் வெயிலின் தாக்கம் காரணமாக பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டிருந்தது. இதில் 6 முதல் 12-ம் வகுப்புகளுக்கு கடந்த 12-ந் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது. தொடர்ந்து 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், தனியார் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு நேற்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது. இதேபோல எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் நேற்று முதல் தொடங்கப்பட்டது. கோடை விடுமுறை முடிந்து மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் பள்ளிக்கு வருகை தந்தனர். பெற்றோர்களும் தங்களது குழந்தைகளை மகிழ்ச்சியுடன் வாழ்த்தி பள்ளிக்கு அழைத்து வந்தனர்.

அழுது அடம்பிடித்த குழந்தைகள்

முதன் முதலாக பள்ளிக்கு செல்லும் குழந்தைகளை பெற்றோர் அழைத்து வந்து பள்ளியில் விட்ட போது சில குழந்தைகள் அழுது அடம்பிடித்தனர். பள்ளியில் பெற்றோரையும் உடன் இருக்குமாறும் சில குழந்தைகள் அழுததும், மேலும் பள்ளியில் விட்டு பெற்றோர் டாடா காட்டி கையசைத்து சென்ற பின்பும், சில குழந்தைகள் வகுப்பைறையை விட்டு அவர்களுடன் செல்ல முயன்றனர். அவர்களை ஆசிரியர்கள் சமாதானப்படுத்தி அமர வைத்த காட்சியையும் பார்க்க முடிந்தது. அதேநேரத்தில் சில குழந்தைகள் அடம்பிடிக்காமல் உற்சாகமாய் முதன் முதலாக பள்ளிக்கு வந்ததில் வகுப்பறையில் மகிழ்ச்சியாக இருந்தனர். மேலும் சாக்லெட் உள்பட இனிப்புகளை சில மாணவ-மாணவிகள், வகுப்பில் சக மாணவர்களுக்கு கொடுத்து மகிழ்ந்தனர். ஆசிரியர்களும் மாணவ-மாணவிகளை வாழ்த்தி வரவேற்றனர். சில பள்ளிகளில் மாணவர்களை மலர் தூவியும், மாலை அணிவித்தும், நெற்றியில் சந்தனம், குங்குமமிட்டும், ஆரத்தி எடுத்தும், இனிப்புகள் வழங்கியும் ஆசிரியர்கள் வரவேற்றனர்.

காலை உணவு

இதேபோல முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படும் அரசு தொடக்கப்பள்ளிகளில் காலை உணவு பரிமாறப்பட்டது. இதில் 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்கள் ஆர்வமுடன் சாப்பிட்டனர். புதுக்கோட்டை ராஜகோபாலபுரம் நகராட்சி தொடக்கப்பள்ளியில் காலை உணவு வழங்கப்பட்டதை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சுவாமிமுத்தழகன் ஆய்வு மேற்கொண்டு, மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்களை வழங்கினார். இதேபோல அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன. மாணவ-மாணவிகள் புத்தகங்களை ஆர்வமுடன் வாங்கி படித்தனர்.

கீரனூர்

கீரனூர் அருகே குளத்தூரில் தொடக்கப்பள்ளி திறப்பை முன்னிட்டு பள்ளி நுழைவுவாயில் வாழை மரங்கள் மற்றும் வளாகம் முழுவதும் கொடி தோரணங்கள் கட்டப்பட்டிருந்தது. இதையடுத்து பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகளை வாசலில் நின்று பள்ளி தலைமை ஆசிரியர் பகவதி அம்மாள் மற்றும் ஆசிரியர்கள், குளத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயராணி மாயகிருஷ்ணன், ஒன்றிய கவுன்சிலர் அமுதா ராணி வெங்கடாசலம் ஆகியோர் பூக்களை தூவி வரவேற்று இனிப்புகள் வழங்கினர்.


Next Story