நெல்லை மாவட்டத்தில் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன
அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்ததை தொடர்ந்து நேற்று நெல்லை மாவட்டத்தில் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன. மாணவ, மாணவிகள் புத்தகப்பையுடன் உற்சாகமாக வந்தனர்.
அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்ததை தொடர்ந்து நேற்று நெல்லை மாவட்டத்தில் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன. மாணவ, மாணவிகள் புத்தகப்பையுடன் உற்சாகமாக வந்தனர்.
பள்ளிக்கூடம் திறப்பு
தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அனைத்து பள்ளிக்கூடங்களிலும் மாணவ-மாணவிகளுக்கு அரையாண்டு மற்றும் 2-ம் பருவத்தேர்வு கடந்த மாதம் 15-ந்தேதி தொடங்கி 23-ந்தேதியுடன் முடிவடைந்தது. இதன் பின்னர் டிசம்பர் 24-ந்தேதி முதல் ஜனவரி 1-ந்தேதி வரை மொத்தம் 9 நாட்கள் விடுமுறை விடப்பட்டது.
இந்தநிலையில் அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு நேற்று பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன.
வகுப்புகள் தொடங்கின
நெல்லை மாவட்டத்தில் நேற்று அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக்குலேசன் மற்றும் தனியார் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்பானது சிறப்பு இறைவணக்கத்துடன் தொடங்கியது.
கிறிஸ்துமஸ், புத்தாண்டு உள்ளிட்ட தொடர் விடுமுறையில் சொந்த ஊருக்கு சென்றிருந்த வெளியூர்களை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் நேற்று அவசர, அவசரமாக பள்ளிகளுக்கு புறப்பட்டு வரவேண்டி இருந்ததால் நேற்று ஒருநாள் மட்டும் பெரும்பாலான பள்ளிகளில் காலை 10 மணிக்கு வகுப்புகள் தொடங்கின.
பாடப்புத்தகங்கள் வினியோகம்
பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தலின் பேரில் ஏற்கனவே 6 மற்றும் 7-ம் வகுப்பு மாணவர்களுக்கான 3-ம் பருவ பாடப்புத்தகங்கள் அந்தந்த பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு விட்டது.
அவற்றை இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வினியோகம் செய்ய தேவையான நடவடிக்கைகளை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மேற்கொண்டு வருகின்றனர். சில பள்ளிக்கூடங்களில் நேற்று புத்தகம் வழங்கப்பட்டது.
1 முதல் 5-ம் வகுப்பு
இதற்கிடையே அரசின் எண்ணும் எழுத்தும் திட்ட பயிற்சி வகுப்பில் கலந்து கொள்வதற்காக அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் செல்வதால் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு வருகிற 5-ந்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுகிறது.
ஆனால் மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் நேற்று முதலே 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலும் திறக்கப்பட்டு பாடம் நடத்தப்பட்டது. பள்ளிகள் திறந்ததை அடுத்து மாணவ, மாணவிகள் உற்சாகமாக வகுப்புகளுக்கு வந்ததை காண முடிந்தது.
போலீஸ் பாதுகாப்பு
நெல்லை மாநகர பகுதியில் பள்ளிக்கூடங்கள் திறப்பையொட்டி போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு பாளையங்கோட்டை பஸ் நிலையத்தில் மாணவர்களுடையே மோதல் ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை கருத்தில் கொண்டு நேற்று பாளையங்கோட்டை பஸ் நிலையம் மற்றும் மாணவ-மாணவிகள் வந்து இறங்கக்கூடிய பஸ் நிலையங்கள் மற்றும் பள்ளிக்கூடங்கள் அருகே போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.