தேனி மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பு: மாணவ, மாணவிகளுக்கு பரிவட்டம் கட்டி உற்சாக வரவேற்பு


தேனி மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பு:  மாணவ, மாணவிகளுக்கு பரிவட்டம் கட்டி உற்சாக வரவேற்பு
x

தேனி மாவட்டத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. மாணவ, மாணவிகளுக்கு பரிவட்டம் கட்டி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது

தேனி


பள்ளிகள் திறப்பு

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன, அதன்படி தேனி மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் என மொத்தம் 937 பள்ளிகள் திறக்கப்பட்டன.

இந்நிலையில் பள்ளிகளுக்கு மாணவ, மாணவிகள் புத்தம் புதிய சீருடை அணிந்து ஆர்வத்துடன் வந்தனர். அப்போது சில மாணவர்கள் அவர்களது பெற்றோருடன் வந்தனர். அவர்கள் குழந்தைகளை கட்டித்தழுவி முத்தமிட்டு அனுப்பி வைத்தனர்.

மாணவர்களுக்கு வாழ்த்து

அவர்களுக்கு பள்ளியின் நுழைவு வாயிலில் நின்ற ஆசிரியர்கள் கைகளில் கிருமி நாசினி தெளித்தனர். பின்னர் இனிப்பு வழங்கியும், பூக்கள் கொடுத்தும் மாணவ, மாணவிகளை வரவேற்றனர். இதையடுத்து பள்ளியில் காலை நேர இறை வழிபாட்டின் போது மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்துகள் தெரிவித்தும், பள்ளி மற்றும் வகுப்பறைகளில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்தும் ஆசிரியர்கள் பேசினர்.

பின்னர் மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் வகுப்பறையில் அமர்ந்தனர். விடுமுறைக்கு பிறகு பள்ளிக்கு வந்ததால், சக நண்பர்களை பார்த்த ஆர்வ மிகுதியில் கட்டிப்பிடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் தங்களின் விடுமுறை கால அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

பரிவட்டம் கட்டி வரவேற்பு

இந்நிலையில் முதல் நாளான இன்றே அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு இலவச பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன. அதனை மாணவர்கள் ஆர்வத்துடன் வாங்கி படித்தனர்.

இதற்கிடையே உப்புக்கோட்டை அருகே பாலார்பட்டியில் உள்ள அரசு கள்ளர் நடுநிலை பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியர்கள் மாலை அணிவித்து பரிவட்டம் கட்டி அழைத்து வந்தனர். அப்போது புதிதாக சேர்ந்த மாணவர்கள் அழுது கொண்டே வந்தனர். அவர்களுக்கு பள்ளி நுழைவு வாயிலில் நின்று கொண்டிருந்த ஆசிரியர்கள் சாக்லேட்் கொடுத்து அழைத்து சென்றனர். இதனால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Next Story