பள்ளிக்கூடங்கள் 12-ந் தேதி திறப்பு: தமிழ்நாடு முழுவதும் 1,500 சிறப்பு பஸ்கள் இயக்கம்
கோடை விடுமுறைக்கு பிறகு வருகிற 12-ந் தேதி முதல் தமிழ்நாட்டில் பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுகின்றன. அதையொட்டி 1,500 சிறப்பு பஸ்களை இயக்க போக்குவரத்து கழகம் ஏற்பாடு செய்து இருக்கிறது.
சென்னை,
தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின்பு 6 முதல் பிளஸ்-2 வகுப்பு வரை 12-ந் தேதியும் (நாளை மறுநாள்), 1 முதல் 5-ம் வகுப்பு வரை 14-ந் தேதியும் தொடங்க உள்ளன.
சிறப்பு பஸ்கள்
கோடை விடுமுறைக்கு குழந்தைகளுடன் சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கு திரும்பி வருவதற்கு வசதியாக அரசு விரைவு போக்குவரத்து கழகம் சிறப்பு பஸ்களை இயக்க உள்ளது.
இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கோடை விடுமுறைக்கு பின்பு பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி 10-ந் தேதி (இன்று), 11-ந் தேதி (நாளை) ஆகிய இரு தினங்களும் கூடுதல் பயணிகள் தமிழ்நாடு முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் சார்பில் தினசரி இயக்கப்படும்பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் முக்கிய இடங்களில் இருந்து வார இறுதி நாட்களில் சென்னைக்கு 650 சிறப்பு பஸ்களும், கோவை, மதுரை, நெல்லை, திருச்சி, சேலம், பெங்களூரு போன்ற இடங்களில் இருந்து வெவ்வேறு பகுதிகளுக்கு 850 சிறப்பு பஸ்களும் என மொத்தம் 1,500 சிறப்பு பஸ்களை இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.
முன்பதிவு
எனவே, தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் தங்களது பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு, முன்பதிவு செய்து பயணித்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இந்த சிறப்பு பஸ்கள் இயக்கத்தினை அனைத்து பஸ் நிலையங்களிலும், போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, கண்காணித்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மதுரை மற்றும் திருச்சியில் இருந்து முன்பதிவு செய்யாத பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் பஸ்கள் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே, பயணிகள் மேற்குறிப்பிட்டுள்ள பஸ் சேவையினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை திட்டமிட்டு கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.