துணை சுகாதார நிலையம் திறப்பு


துணை சுகாதார நிலையம் திறப்பு
x

`தினத்தந்தி' செய்தி எதிரொலியால் செருமங்கலத்தில் புதிய கட்டிடத்தில் துணை சுகாதார நிலையம் திறக்கப்பட்டது.

திருவாரூர்

திருவாரூர் மாவட்டம் வடுவூர் அருகே உள்ளது, செருமங்கலம். இங்கு அரசு துணை சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இதன்மூலம் செருமங்கலம், பேரையூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பயன்பெற்று வந்தனர். குறிப்பாக இந்த துணை சுகாதார மையத்தின் மூலம் நோயாளிகள், கர்ப்பிணிகள் அதிகளவு பயன் பெற்று வந்தனர். வளர் இளம் பெண்களுக்கு மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வந்தன. ஆனால், இந்த துணை சுகாதார நிலைய கட்டிடம் சேதமடைந்ததால் இங்கு பணியாற்றிய கிராம சுகாதார செவிலியர், இடைநிலை சுகாதார பணியாளர் வாடகை இடத்தில் தங்கி மருத்துவ ஆலோசனை வழங்கி வந்தனர்.

மீண்டும் திறப்பு

செருமங்கலத்தில் மீண்டும் துணை சுகாதார நிலையம் கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து தினத்தந்தி'யில் செய்தி பிரசுரமாகி இருந்தது. இதன் எதிரொலியாக புதிய கட்டிடம் கட்டப்பட்டு தற்போது செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இப்புதிய கட்டிடத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்துள்ளார். இதனால் மக்களுக்கு மீண்டும் தரமான மருத்துவ சேவை கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் தஞ்சை-மன்னார்குடி மாநில நெடுஞ்சாலையின் அருகிலேயே இந்த சுகாதார நிலையம் அமைந்துள்ளதால் அவசர காலத்தில் முதலுதவி சிகிச்சை அளித்திடவும் இயலும். இதுகுறித்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்டு உதவிய `தினத்தந்தி'க்கும் செருமங்கலம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.


Next Story